வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்றால் என்ன? -யதீந்திரா

சில விடயங்கள் குறித்து என்னதான் பேசினாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை அனைத்தும் எருமை மாட்டில் மழை பெய்த கதையாகவே விரயமாகிறது. எவ்வாறு இந்த நிலைமைகளை தெளிவுபடுத்தலாம்? எவ்வாறு ஒரு ஆரோக்கியமான உரையாடல் பரப்பை உருவாக்கலாம்? நம்மால் அது முடியுமா? எல்லாமே சந்தேகமாகவே இருக்கிறது. இருப்பினும் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் முருங்கை மரத்து வேதாளத்தைத் திருப்திப்படுத்த முயன்ற விக்கிரமாதித்தியன் போல், தங்களால் முடிந்தளவு எழுதியும் பேசியும் வருகின்றனர்.

இப்படியான வேதாளவாதிகள் எங்களைப் போன்றவர்கள் மீது முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு – இவர்கள் முன்னர் அப்படிப் பேசினார்கள், இப்போது இப்படிப் பேசுகின்றனர் எனவே இவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். துரோகிகள். உளவுத்துறை முகவர்கள். இப்படியான முருங்கை மர வேதாளிகளுக்கு என்னைப் போன்றவர்கள் கூறக் கூடிய ஆகச் சிறந்த பதில் – முன்னர் இருந்த நிலைமை வேறு இப்போது இருக்கின்றன நிலைமை வேறு – முன்னர் நாங்கள் அப்படிப் பேசியதும் மக்களுக்காகத்தான். இப்போது இப்படிப் பேசுவதும் மக்கள் நலனை முன்னிறுத்தித்தான் – எங்களது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியல்ல.

முன்னர் விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் மிகவும் விரல்விட்டு எண்ணக் கூடிவர்களைத் தவிர நாம் அனைவருமே புலிகளை ஆதரித்திருந்தோம் என்பது உண்மை. இதில் பூசி மெழுகுவதற்கு எதுவுமில்லை. இனிப் பூசி மெழுகுவதால் ஆகப் போவதும் எதுவுமில்லை. புலிகளை ஆதரித்தவர்களில் பல வகையினர் இருந்தனர். புலிகளை ஒரு பணம் காய்க்கும் மரமாகக் கருதி அவர்களுக்கு பினாமிகளாக இருந்தவர்கள் சிலர். புலிகள் வென்றுவிட்டால் என்ன செய்வது ஆகவே கொஞ்சம் ஆதரவாகக் காட்டிக் கொள்ளுவோமே என்ற எண்ணத்தில் புலிவாதிகளாகியவர்கள் சிலர். உணர்ச்சிவசப்பட்டு அள்ளுப்பட்டவர்கள் சிலர். புலிகளின் தவறுகளுக்கும் அப்பால் அவர்களது காலத்தில் நமது மக்களுக்குகொரு விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புலிகளை ஆதரித்தவர்கள் சிலர் – இவர்களில் பலர் புலிகளை முன்னிறுத்தி பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் ஒன்றுதான் எழுத்து.

ஆனால் இவ்வாறானவர்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் பொய்த்துப் போகச் செய்யும் வகையில், புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே தொலைத்துவிட்டுப் போய்விட்டது. இதன் பிறகு புலிகளின் தலைமையின் திறமைகள் குறித்துப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஆனாலும் சிலர் இதன் பின்னரும் புலிகளின் சாதனைகள் பற்றிப் பேச வேண்டுமென்று விரும்புகின்றனர். நாங்கள் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டோம் என்கின்றனர். 22 இற்கு மேற்பட்ட நாடுகள் வராது இருந்தால் பிரபாகரனை விழுத்தியிருக்க முடியுமா என்று கேட்கின்றனர். ஒரு அரசாங்கம் தனது நலன் சார்ந்து உறவுகளைப் பேணாமலா இருந்திருக்கும் என்ற மிகச் சிறிய உண்மையைக் கூட விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக, சிலர் இருப்பது குறித்த நம்மால் கவலைப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்.

இவர்கள் இவ்வாறெல்லாம் சிந்திப்பதும் எழுதுவதும் கூட எமக்குப் பிரச்சனையல்ல. நூறு பூக்கள் பூக்கட்டுமே என்று மாவோவில் பாரத்தைப் போட்டுக் கொண்டு, நாங்கள் எங்களது வழியில் சிந்திக்க முடியும். (சமீபத்தில் பல்லவி ஜயர் எழுதிய ‘சீனா விலகும் திரை’ என்னும் நூலில் மாவோவின் ‘நூறு பூக்கள்’ கதையைக் கேட்டுத்தான் மாவோவின் படைகளுக்கு அஞ்சி ஒழிந்திருந்த பலர் வெளியில் வந்து அகப்பட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் உண்மை பொய் நாம் அறியாத ஒன்றானாலும் மிகவும் இறுக்கமான அமைப்புக்களில் கருத்துச் சுதந்திரம் என்பது எப்போதுமே இரண்டாம் பட்சமான ஒன்று என்பதை வேறு எவரும் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை).

ஆனால் இவ்வாறானவர்கள், தங்களைப் போன்றே நாங்களும் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும்போதுதான் இங்கு பிரச்சனை ஆரம்பிக்கின்றது. அவ்வாறு சிந்திக்க மறுப்பவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், உளவுத் துறை முகவர்கள் என்றெல்லாம் இவர்கள் சொல்லும்போதுதான் அது குறித்து சில வேளைகளில் பதிலிறுக்க வேண்டிய பொறுப்பு எங்களைச் சாருகிறது. சில உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்களும் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்த இடத்தில்தான் எங்களைப் போன்றவர்கள் ஒரு கேள்வியின் மூலம் இடைமறிக்க வேண்டிய தேவை எழுகிறது – வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்றால் என்ன? ஜேர்மனிய அறிஞர் ஹெகல் வரலாறு பற்றிக் குறிப்பிட்டிருக்கும் கருத்து நமது சூழலுக்கு அச்சொட்டாகப் பொருந்திப் போகிறது – ‘வரலாற்றில் இருந்து நாம் எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால் அது எதனையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும்தான்’ – இப்படியொரு கருத்தை ஒரு தகவலுக்குத்தானும் நான் முன்னர் குறிப்பிட்டவகை வேதாளவாதிகள் அறிந்திருப்பார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மற்றவர்களை சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், உளவுத்துறை முகவர்கள் என்றெல்லாம் இவ்வாறானவர்கள் சொல்லும் போது, அவர்களுக்கான பதிலாக நாங்கள் ஹெகலின் மேற்படி கருத்தைத்தான் சொல்ல முடியும்.

விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. ஒரு அமைப்பு அழிவடைந்துவிட்டது என்றால் அதன் மூலம் கிடைக்கும் செய்தி அதன் வழிமுறைகள், உபாயங்கள், அரசியல் பார்வை அனைத்தும் தவறானது? அது இனிப் பயனற்றது? இந்த அடிப்படையில்தான் தமிழர்களின் கடந்த அறுபது வருட கால அரசியல் வரலாறு நகர்த்தப்பட்டிருக்கிறது. வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ் மிதவாதத் தலைமைகள் (Tamil Moderate Leadership) அதனை முன்னெடுக்கத் தோதானவர்கள் அல்ல, என்பதில் தொடங்கிய இயக்கங்களின் தோற்றம் இறுதியில் ஒன்றை ஒன்று கழித்துச் செல்லுவதாக அரசியல் நகர்த்தப்பட்டது. இறுதியில் புலித் தலைமையின் அணுகுமுறையும் பிழையானது என்பதையே அவர்களது முடிவு நிரூபித்திருக்கிறது.

முன்னர் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது புலித் தலைமையின் மீதான விமர்சனம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த விடயம் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கொள்ளத்தக்கது – எங்கட தலைவர் பிழை என்றால் நாங்கள் அழிந்தல்லவா போயிருப்பம் – நாங்கள் இப்போதும் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் ஆகவே எங்களது தலைவரின் முடிவுகள் சரி – ஒரு பேராசிரியர் பிரபாகரன் குறித்து விமர்சனங்களை முன்வைத்த போது, தான் இவ்வாறு கூறி அவரை நிராகரித்ததாகவும் அந்த நண்பர் கூறினார். அந்த நண்பரின் வாதத்தை அப்போது என்னால் நிராகரிக்க முடியாமல் இருந்தது. ஏனெனில் அன்றைய சூழலில் அவரது தர்க்கம் சரியானது. ஆனால் இப்போதும் அவரால் அப்படிச் சொல்ல முடியுமா? இதுதான் முன்னதுக்கும் பின்னதுக்குமான பிரச்சனை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதில் உள்ள தடுமாற்றம்தான் நமது இன்றைய உரையாடல் பரப்பெங்கும் காணப்படும் சின்னத்தனங்களுக்கும் காரணம்.

மக்களை தொடர்ந்தும் ஒரு வகை கனவுலகிற்குள் வைத்திருக்கவே சிலர் விரும்புகின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை கே.பி பகிரங்கப்படுத்தியதில் தொடங்கிய தில்லு முல்லுகள் இன்னும் ஓயவில்லை. இன்று உருத்திரகுமார் தலைமையிலான அணியினர் மே.19 நாளை துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதன் மூலம் எவருமே உயிருடன் இல்லை என்பதை பூடகமாகச் சொல்லியிருக்கின்றனர். ராஜிவ் காந்தியின் கொலை வழங்கின் பிரதான குற்றவாளிகளாகக் கருதப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரை இந்தியா வழக்கிலிருந்து நீக்கி விட்டது. இவைகள் எல்லாம் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லுகின்றன. ஆயினும் மக்களை தொடர்ந்தும் அறியாமையிலும் கனவுலகிலும் வைத்திருக்க வேண்டியது சிலருக்கு இப்போதும் தேவையாக இருக்கிறது.

இதற்கு சவால் விடும் வகையில் எழுதிவரும் எங்களைப் போன்றவர்களை அவர்களது பார்வையில் பிரச்சினைக்குரியவர்களாகத் தெரிவது ஆச்சரியமான ஒன்றல்ல. எங்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் போகும் போதெல்லாம், அவ்வாறானவர்கள் ‘இவங்கள் எல்லாம் அரசின் ஆக்கள்’ அல்லது ‘சந்தர்ப்பவாதிகள்’, அதுவும் இல்லாவிட்டால் உளவுத்துறை முகவர்கள் – என்று சொல்லுவதன் மூலம் தங்கள் இயலாமையை நிரூபிக்கின்றனர். ஒன்றில் டக்ளசுடன் அல்லது கருணாவுடன் தொடர்புபடுத்துவதன் மூலம் தங்களின் வாதத்தை வலுப்படுத்திக் கொள்ள விழைகின்றனர். இந்த வரிசையில் இப்போது அவர்களுக்கு மெல்லுவதற்கு கிடைத்திருக்கும் அவல் – கே.பி.

நாம் ஒரு வரலாற்றுக் காலத்தை கடந்து வந்திருக்கிறோம். அந்த வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடியது என்ன என்பதுதான் கேள்வி. நமது கடந்த காலம் நமக்கு வழங்கியிருக்கும் படிப்பினைகளை முன்னிறுத்தியே நிகழ்காலத்தின் ஒவ்வொரு அடியையும் நாம் எடுத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வார்தைகளையே நாம் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் – கடந்த காலத்தின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர் – (ஜோஜ் சத்நயனா) – The one who does not remember history is bound to live through it again – George Santayana – (1863-1952)

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply