இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டோர் தகவல்களை அறிய முடியும்
இறுதிக் கட்டப்போரின்போது படையினரிடம் சரண்அடைந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், கைதாகி விடுவிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். கொழும்பு, வவுனியா, பூஸா ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தொடர்பு கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகள் தாம் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம சேவகரின் கடிதத்துடன் மேற்கண்ட இடங்களிலுள்ளபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்று தகவல்களைப் பெற் றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுத் தொடர்களின் போது போரின் இறுதிக் கட்டத்தின் போது படையினரிடம் சரண் அடைந்தவர்களின் விவரங்களை வெளியிடுமாறு கூட்டமைப்புக் கோரிவந்தது.
வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அரசு அழைப்பும் விடுத்திருந்தது. இரு தடவைகளும் கூட்டமைப்பினர் வவுனியாவுக்குச் சென்றபோதிலும் பட்டியல் ஏதும்கையளிக்கப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரம் பயங்கவரவாத விசாரணைப் பிரிவு, தடுத்துவைக்கப்பட்டுளளவர் விவரங்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்க மூன்று நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இப்போது அரசு அறிவித்துள்ளது.கைதாகித் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்கள், தடுத்துவைக்கப்பட்டு விடுவிக் கப்பட்டவர்கள் ஆகியோரின் விவரங்களை மேற்குறிப்பிட்ட மூன்று நிலையங் களிலும் இன்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி உதயனுக்குத் தெரிவித்தார்.கைதானவர்களின் நெருங்கிய உறவினர்களான மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் ஆகியோர் தகவல்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தத்தமது பிரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம உத்தியோகத்தர்களின் சிபார்சுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்க ளுக்குச் சென்று விவரங்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2ஆம் மாடி, புதிய செயலகக் கட்டடம், கொழும்பு 1, தொலைபேசி 011238 4400, பயங்கரவாத விசாரணைப் பிரிவு: கண்டி வீதி, வவுனியா(பிரதிப் பொலிஸ் மா அதிபர் செயலகம் முன்னால்) தொலைபேசி 0243243207 பயங்கரவாத விசாரணைத் தடுப்பு முகாம் ரேஸ்கோஸ் வீதி, காலி. தொலைபேசி 0912267084
மேற்படி அறிவித்தலின் பிரகாரம், குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கேட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply