த.தே.கூ கூட்டத்தில் இராணுவத்தினர் தாக்கியதாக புகார்
யாழ்ப்பாணம் அளவெட்டியில் வியாழனன்று நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அந்தப் பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டம் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் நடந்துகொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த இராணுவத்தினர், கூட்டம் நடத்த அனுமதி இருக்கிறதா என்று கேட்டு அனைவர் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாக பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலில் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும், பல பொதுமக்களுமாக பலர் காயமடைந்ததாகவும், சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் , பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
இது தொடர்பாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறுகையில், “இராணுவத்தினர் வழமைபோல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டமொன்றை நடப்பதை அவதானித்தனர். என்ன நடைபெறுகிறது என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர் விசாரித்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக என இராணுவத்தினர் விசாரித்தனர். அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தமுடியாது என இராணுவத்தினர் கூறினர். அப்போது எம்.பி.களின் மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸார் இருவர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்'”என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply