தமிழர்களுக்கு எதிரான போக்கை இலங்கை கைவிடவேண்டும் : தங்கபாலு
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போக்கை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும்.
அந் நாட்டில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந் நேரத்தில் தமிழர்கள் வாழும் முக்கியப் பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அச்சுறுத்தவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அஞ்சப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பதால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை இரு க்கிறபோது பொதுமக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடும் அரசின் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று பிரதமர் மன்மோகன்சிங்கை கேட் டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply