நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதில் எதனையும் அளிக்கப் போவதில்லை : அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதில் எதனையும் அளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அபிவிருத்தி தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனை சர்வதேச சமூகம் பார்வையிடக் கூடிய வகையில் பகிரங்கப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு உருவாக்கப்பட்டதாகவும், அந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட போதே அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டதாகவும், அதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு மட்டும் பதிலளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான அறிக்கைகளை தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிற்கான உணவு விநியோகம், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார். பான் கீ மூனின் நியமனம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியான குரோதத்தை வெளிப்படுத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செனல்4 ஊடக ஆவணப்படம் மற்றும் தாருஸ்மன் அறிக்கை போன்றவற்றை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரசல்ஸில் ஜீ.எஸ்.பி சலுகைத் திட்ட நீடிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளின் போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்குடன் சந்திப்பு நடத்துதற்கு முன்னர், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி உரையாற்றுவதற்கு முன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வீடியோ காட்சிகள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செனல்4 ஊடக ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்தும் எனவும், குறித்த ஆவணப்படம் ந்;தாடர்பில் பல்வேறு சந்தேககங்கள் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தின் துல்லியத்தன்மையை கருத்திற் கொண்டால் அது செல்லிடப்பேசி மூலம் எடுக்கப்பட்டதல்ல என்பதனை விளங்கிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சியின் ஒளி ஒலி வடிவங்களின் தன்மையிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போது எவ்வித் பின்னணி ஒலியும் கேட்கவில்லை உதாரணமாக பறவைகளின் ஒலி போன்றவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த ஆவணப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply