வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம்
யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும், வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் உதவும் முகமாக அரசாங்கம் வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. வடபகுதியில் உள்ள மக்கள் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக கொழும்பிற்கு வந்து பலநாட்கள் தங்கியிருந்து பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் இத்திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் வவுனியாவில் திறக்கப்படவுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவித்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா, வடபகுதி மக்கள் இங்கு சகல தேவையான ஆவணங்களின் பிரதிகளுடன் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை 2500ரூபா கட்டணத்துடன் செலுத்திவிட்டால் அதனை 6 வேலை நாட்களுக்குள் பரிசீலனை செய்து திணைக்களத்தின் அதிகாரிகள் புது கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வழங்குவார்கள் என்று கூறினார்.
இதனால் வடபகுதி மக்கள் ஒரு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அங்கிருந்து கொழும்புக்கு மூன்று நான்கு பேராக வந்து 10ஆயிரத்திற்கும் கூடுதலான பணத்தை செலவு செய்து கொழும்பில் தங்கியிருப்பதற்கும் தக்க வசதியின்றி கடவுச்சீட்டை பெற்று திரும்பும் அவர்களுக்கு இந்த வவுனியாவில் ஆரம்பிக்கப்படும் இந்த பிராந்திய காரியாலயம் ஒரு வரப்பிரசாதமாக அமையுமென்றும் கூறினார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களமே அரசாங்கத்தின் பொதுச் சேவை வழங்கும் திணைக்களங்களில் ஆகக்கூடுதலான வருமானத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் திணைக்களமென்று சுட்டிக்காட்டிய சூலானந்த பெரேரா, தமது திணைக்களத்தை விட, வரி அறவிடும் அரச திணைக்களமான சுங்கத் திணைக்களம் கூடுதலான வருமானத்தை அரசுக்கு ஈட்டிக் கொடுப்பதாகவும் சொன்னார்.
எனினும், சேவை வழங்கும் திணைக்களமான குடிவரவு குடியகல்வு திணைக்களம் மாதமொன்றுக்கு 300 மில்லியன் ரூபாவை அரசுக்கு வருமானமாக பெற்றுக் கொடுக்கிறது என்றும் கூறினார். நாளொன்றுக்கு சராசரியாக 3000 கடவுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களை விட ஒரு நாள் சேவையின் கீழ் 2000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரட்டிப்பு வீசா வழங்கும் முறை; ஒன்லைன் மூலம் வீசா வழங்கும் புதிய செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் போது அதன் மூலம் மாதமொன்றுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் 200 கோடி ரூபாவை வருமானமாக பெற முடியுமென்று அவர் மேலும் தெரிவித்தார். இப்போது குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் எவ்வித காலதாமதமும் இருப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply