யாழ். நயினாதீவில் இலங்கை வங்கி சேவை
யாழ். நயினாதீவில் வாழும் 3000 குடும்பங்களுக்கு சிறந்த வங்கிச் சேவையை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் இலட்சியக் கனவை நிறைவேற்றும் நோக்கத்துடன் இலங்கை வங்கி நயினாதீவில் தனது கிளையொன்றை திறந்துவைத்துள்ளது. இதுபற்றி இலங்கை வங்கியின் தலைவர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தருகையில் வெளியிடங்களிலிருந்து வங்கிச் சேவையில் துண்டிக்கப்பட்டிந்த நயினாதீவு மக்களுக்கு அங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கிளை ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்ற தென்றும் இனிமேல் நயினாதீவு மக்கள் கப்பல் ஏறி யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கள் வங்கிக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அவசியம் ஏற்படாதென்றும் கூறினார்.
இந்த வங்கிக் கிளை வங்கியின் வங்கித் தொடர்பு வலையமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதனால் உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அனுப்பும் பணத்தை நயினாதீவு மக்கள் தங்கள் கிளையின் மூலம் எவ்வித பிரச்சினையும் இன்றி பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சொன்னார்.
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கல்வி கற்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நயினாதீவில் இருந்தவாறே பெற்றோர், இந்த கிளையின் மூலம் பணம் அனுப்பிவைக்க முடியும். நயினாதீவு கிளையில் ஏரிஎம் பணம் எடுக்கும் தன்னியக்க இயந்திரமும் பொருத்தப் பட்டுள்ளது.
இதுபற்றி தொடர்ந்தும் தகவல் தந்த இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்கிரமசிங்க, நாகபூசணி அம்மன் கோயில் உண்டியல் பணம், நாக விகாரையின் உண்டியல் பணம் ஆகியவற்றை வங்கிகளில் வைப்புச்செய்ய வேண்டுமானால் இவ்விரு மத வழிபாட்டுத் தலங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கப்பல் மூலம் ஊர்காவற்றுறைக்கு அல்லது யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டியிருக்கும். இப்போது இந்த வங்கிக் கிளை தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளது.
நயினாதீவு மக்களுக்கு விவசாயம் செய்வதற்கும் கடல் தொழில் செய்வதற்கும் சுயவேலைவாய்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் இலங்கை வங்கி சலுகை அடிப்படையிலான வட்டிக் கடன் உதவி வழங்கவும் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார். வங்கிக் கிளை ஆரம்பித்த முதல் நாளன்று நயினாதீவு மக்கள் 30 இலட்சம் ரூபாவை வைப்புச் செய்ததாக அவர் பெருமையுடன் எடுத்துரைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply