மக்கள் சக்தியால் தெரிவான ஜனநாயகத் தலைவரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது : அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
சர்வதேச ரீதியில் ஒலிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குரலை ஒடுக்குவதற்கான சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய தொடர் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமே ‘சனல்-4 விவகாரமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாட்டு மக்களின் அமோக வாக்குகளால் பதவிக்குவந்த ஒரு ஜனநாயகத்தலைவரை தேசிய, சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கவே உள்ளன. அவரை ஒரு போதும் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாது என தெரிவித்த அமைச்சர், நாட்டிற்காக தொடர் சவால்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் நபர், எதற்கும் சளைக்காதவர் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ‘சனல்-4 விவகாரம் புதியதொன்றல்ல இதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கம் சம்பந்தப்படும் முக்கிய சர்வதேச விடயங்களின் போது இது வெளிக் காட்டப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் ஊடக பிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்த மாநாட்டில் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டார். சுமார் 48 மணித்தியாலங்களில் அவர் இலங்கைக்குப் பெரும் பிரதிபலன்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
சீனா, ரஷ்யா, உட்பட பல முக்கிய நாடுகளின் தலைவர் களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் இலங்கையின் வர்த்தகம், பொருளாதாரத்துறை மேம்பாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
நாடு தற்போது என்றுமில்லாத முன்னேற்றம் கண்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் சில சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக சூழ்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
‘சனல்-4 விவகாரம் இன்று அல்லது நாளை என்றில்லை. இது அரசுக்கு எதிரான தொடரான சதி. அரசாங்கத்தின் வெற்றிகரமான பயணத்தைச் சீர்குலைக்க எடுக்கும் பிரயத்தனம் இது.
‘சனல்-4’ விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
உண்மையில் ‘சனல்-4 உண்மைக்குப் புறம்பானது. உதாரணமாக ஒரு கையடக்கத்தொலைபேசி கமராவில் காட்சிகளை இந்தளவில் பதிய முடியாது என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் சம்பவம் கூறப்படும் பின்னணி பொருத்தமில்லாதது. காட்சிகளைப் பார்ப்பதற்கும் பேச்சுக்களை கேட்பதற்குமிடையில் பாரிய வித்தியாசத்தைக் காணமுடிகிறது. இவற்றிலிருந்து இது ஒரு போலி முயற்சி என்பது தெளிவாகிறது.
சாரணையில் ஈடுபட்டுள்ள எமது ஆணைக்குழு இத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குப் பலமுறை அழைப்பு விடுத்து. எனினும், அந்நிறுவனம் அதனை ஏற்கவில்லை. இது ஒரு போலித்தொகுப்பு என்பதாலேயே எமது அழைப்பை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ.எஸ்.பி.பிளஸ் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கள் நடந்த காலத்தில் முதல் தடவையாக ‘சனல்-4 காட்சிகள் வெளியிடப்பட்டன. அதற்கடுத்ததாக நான் லண்டனில் முக்கியமான பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்தபோதும், மூன்றாவதாக ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோதும் இக்காட்சிகள் வெளியிடப்பட்டன.
இவற்றை நோக்குகையில் இது குறுகிய அரசியல் நோக்கத்தைக் கொண்டவர்களின் சதிமுயற்சி என்பது தெளிவாகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply