பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை
பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார். ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.
ஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.
ஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.
இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply