தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு கலைப்பு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிளவு கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பலமடையத் தொடங்கியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறீகாந்தா ஆகிய இருவரும் தமது தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பைக் கலைத்து விடுவதென்ற முடிவை தமது கட்சியின் பொதுக் குழு எடுத்திருப்பதாக நேற்று யாழில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளனர். மீண்டும் தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இணைவதென்ற முடிவையே எடுத்துள்ளனர். இதனால் கூட்டமைப்பு மீண்டும் பழைய வலுவைப் பெற வழியேற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கே. சிவாஜிலிங்கம் மற்றும் என். சிறீகாந்தா இருவரும் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் உரையாற்றுகையில்,
“தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற தமது கட்சியின் பொதுக் குழு ஒன்று கூடி கட்சியை கலைத்து விடுவதெனவும், பெரும்பாலானவர்கள் மீண்டும் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைந்து விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு இணையாத ஏனைய அங்கத்தவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளில் இணைந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் முன்னணித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிரதிநிதிகள் குழுவொன்று தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுகளையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த இக்குழுவினர் யாழிலும் வவுனியாவிலுமென பேச்சுகளை நடாத்தியிருந்தனர்.
தற்போதைய மோசமானதொரு சூழலில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். ஆகக் குறைந்த ஓர் அரசியல் தீர்வு அடிப்படையிலாவது இந்த ஒருங்கிணைவு இருக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே புலம்பெயர் உறவுகளின் சமரசத்துடன் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற தமது கட்சியைக் கலைத்து விடுவதென்ற முடிவை இக்கட்சியின் பொதுக் குழு ஒன்று கூடி முடிவெடுத்துள்ளது.
நடத்தப்பட்ட பேச்சுகளின் போது இயக்கத்தின் அரசியல் தலைவராக கே. சிவாஜிலிங்கத்தை மீண்டும் நியமிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடவுள்ள இயக்கத்தின் தேசிய மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன என அவர்கள் தெரிவித்தனர். பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் தெரிவுகள் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply