காபூல் அருகே தற்கொலை படை தாக்குதல் : பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகில், மருத்துவமனை ஒன்றில் நேற்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் பலியாயினர். இச்சம்பவத்தில் கட்டடம் தரைமட்டமானது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் நடந்த தாக்குதல்களில் மிக மோசமானது இதுதான்.
காபூலில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ள லோகர் மாகாணத்தில், அஜ்ரா மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றின் அருகே, நேற்று கார் ஒன்று வேகமாக வந்தது. அங்கிருந்த போலீசார் அதைத் தடுத்து நிறுத்தினர். அப்போது கார் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், அருகில் இருந்த மருத்துவமனைக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 60 பேர் பலியாயினர்.

கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு தலிபான்கள் தான் காரணம் என அதிகாரிகள் கூறினர். ஆனால், தலிபான் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ல், காபூலில் இந்தியத் தூதரகத்தில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதையடுத்து தற்போதுதான் மிக பயங்கரமான தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என, சமீபத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply