தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எட்டாவது தடவையாகவும் ஏமாற்றி அனுப்பியது அரசு: சம்பந்தன் எம்.பி விசனம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றன.
நேற்றைய பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சிறிலங்கா அரசின் பரிந்துரைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தை தருவதாக அரசதரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்திருந்தனர். இந்த ஆவணம் நேற்று தமது கைகளில் கிடைக்கும் என்று கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரும் எதிர்பார்ப்புடன பேச்சுக்குச் சென்றிருந்தனர். ஆனால் நேற்றைய பேச்சுக்களில் அத்தகைய எழுத்துமூல ஆவணம் எதையும் சிறிலங்கா அரசதரப்பு கையளிக்கவில்லை.
எனினும் எதிர்வரும் சந்திப்புகளின் போது- இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எழுத்துமூல ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.அதேவேளை, நேற்றைய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,
நேற்றைய பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு எந்தவிதமான எழுத்து மூல ஆவணத்தையும் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை.இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் நாள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சந்திப்புக்களைப் போன்றே இந்தமுறையும் பழைய விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டதாக சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் மீண்டும் எதிர்வரும் 06ம் திகதி இருதரப்பும் சந்தித்துக் கலந்துரையாட இணக்கம் காணப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply