அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் முன்வைக்க வேண்டும் : TNA

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பகிர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப் பாடு எழுத்துமூலம் வழங்கப்படவேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப் பாட்டில் எந்தவிதமாற்றமும் இல்லையென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான 8வது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை நடைபெற்றிருந்தது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமுல்படுத்தப்பட வேண்டிய முக்கிய விளக்கங்கள் அடங்கிய எழுத்துமூல ஆவணம் கையளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 8வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கப் பிரதிநிதிகள் தம்மிடம் எந்தவிதமான எழுத்துமூல ஆவணமும் கையளிக்கப்படவில்லையெனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசாங்கத்தின் நிலைப்பாடு எழுத்துமூலம் வழங்கப்படவேண்டும் என்பதை 8வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியிருந்ததாகவும் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாகவே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானிக்கப்படும் என அரசாங்கப் பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், தெரிவுக்குழு தொடர்பாக சரியான விளக்கம் இல்லாமல் இது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கமுடியாது. தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றித் தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றும் சுமந்திரன் கூறினார். அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply