‘யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது’ : அரசு

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் குடத்தனை மற்றும் ராமாவில் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 402 குடும்பங்கள் வடமராட்சி கிழக்கில் உள்ள அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற அனு மதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையுடன் யாழ் குடாநாட்டில் உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இன்று ஞாயிற்றுக் கிழமை முடிவுற்றதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

எனினும், யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அங்கு பல பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கூறியிருக்கின்றனர்.

போக்கறுப்பு கிராமசேவகர் பிரிவில் உள்ள கோவில் வயல் என்ற கிராமத்தில் போரின் போது கணவனை இழந்த குடும்பங்களுக்கென இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள 10 வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று கலந்து கொண்டார்.

இவருடன் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தப் பிரதேசத்தில் கணவனை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து அவர்களைக் குடியேற்றி, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டிருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply