தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையேல் நாடு முன்நோக்கிச் செல்லாது!
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும். அதனைத் தீர்க்காது நாடு தொடர்ந்தும் முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அடிப்படை தேசியப் பிரச்சினைக்கான தீர்வு எனவும் மனித வளம் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தினமின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தேசியப் பிரச்சினையானது இந்தியாவினதோ, சர்வதேசத்தினதோ பிரச்சினையல்ல. அது இலங்கையின் பிரச்சினை. தற்போதைய அரசாங்கம் சர்வதேச தேவைக்கமைய செயற்படாது என்பதை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்காது எனவும் கூறியுள்ளது.
யுத்தம் முடிவடைந்துள்ளதால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது போனால் மீண்டும் பிரச்சினை ஏற்படும். பயங்கரவாதம் அல்லது பிரிவினைவாதம் ஏற்படுவதற்கு காரணம் சமுக பொருளாதார அரசியல் விடயங்கள் உள்ளன. இவற்றை அரசியல் தீர்வின் மூலமே தீர்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை இவ்வளவுதூரம் வளர்ச்சியடைய சகல அரசியல் கட்சிகளும் பொறுப்பு கூறவேண்டும். இதனால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்புள்ளது. அத்தோடு, இது எதிர்க்காலச் சந்ததியைப் பாதிக்கும் விடயமாகும்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு 50 வருடகால வரலாறு உண்டு. இதனடிப்படையில் 30 வருடகாலம் யுத்தம் நீடித்தது. நாட்டின் இருப்புக்கும் அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வு நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனால் தொடர்ந்தும் தாமதிக்காது அதற்குத் தீர்வை வழங்க வேண்டியது சகலரதும் பொறுப்பு எனவும் டியூ குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பிரச்சினை குறித்து இரண்டு தரப்பு மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதால் ஏனைய தரப்பினர் அதனை சீர்குலைத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தனி நிலைப்பாட்டுக்கு அமைய யோசனை முன்வைக்காது. சகல கட்சிகளும் இணைந்து யோசனை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கி அதனை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததன் மூலம் புதிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டியூ குணசேகர மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply