பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார் : ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

புகழ்பெற்ற அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் புதன்கிழமை கொழும்பில் காலமாகியுள்ளார். 1932 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்த அவர் தனது பாடசாலைக் கல்வியின் பெரும்பகுதியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் பயின்றார்.

1970 ஆம் ஆண்டு லண்டன் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப்பெற்ற சிவத்தம்பி, தமிழிலக்கிய திறனாய்வில் முக்கிய பங்காற்றினார். சுமார் 17 வருடங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். தனது பாடசாலைக் காலம்முதல் முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த அவர் வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான போது அதனை விமர்சித்தவர்களுல் பிரதானமானவர்.

கொழும்பு இதழியற் கல்லூரியில் நான் கற்றசமயம் அங்கு பலசந்தர்ப்பங்களில் அவர் விரிவுரையாற்ற வந்தபோதே பேராசிரியர் சிவத்தம்பியுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பானது சில வருடங்கள் நீடிக்கவும் செய்தது. குறிப்பாக எமது அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் அவர் உரிமையுடன் ‘டேய் தம்பி’ அல்லது ‘அன்ஸிர்’ என அழைத்து உரையாடுவார். சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுவார். அப்போது பாராளுமன்ற செய்தியாளராக நான் பணியாற்றிபோது பாரர்ளுமன்ற சபையில் நடைபெறும் சில சம்பவங்களை பத்திரிகையில் அறிக்கையிட முடியாது. அதற்கு சபாநாயகர் ஊடகவியலாளர்களுக்கு அனுமதியும் தருவதில்லை. இந்நிலையில் வெளியே வராத அவ்விடயங்களை அறிந்து கொள்வதில் அவருக்கிருந்த ஆர்வம் குழந்தைதனமிக்கது. அவற்றை என்னிடம் அமைதியாக கேட்டு அறிந்துகொள்வார்.

அத்துடன் அவர் சில புத்தகங்களை எழுதிக்கொண்டிருந்த காலமது. என்னுடைய அலுவலகப்பணி மாலையில் முடிவடைந்தவுடன் அவரது வெள்ளவத்தை வீட்டிற்குச் சென்று அவருக்கு உதவும் பழக்கத்தை சிலமாதங்கள் கொண்டிருந்தேன். அலுவலகம் முடிந்து அவரது வீட்டுக்குச் செல்லும் போது நான் சோர்வுடன் அல்லது பசியுடன் செல்வது பொதுவானது. அச்சந்தர்பங்களில் பேராசிரியர் சிவத்தம்பி வீட்டு குளிர்சாதனப் பெட்டி என்னுடைய சோர்வை நீக்கி, பசியை போக்கும் ஒரு இயந்திரமாகவும் செயற்பட்டது.

ஊடகங்களில் என்னுடைய கட்டுரைகள் வெளியாகிய போது அதுகுறித்தும் உரிமையுடன் அவர் கருத்துக்களை பகிர்ந்துகொள்வார். மூதூர் முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டசமயம் அங்கு பாதுகாப்பு அமைச்சு ஊடகவியலாளர் என்றமுறையில் என்னையும் அழைத்துச் சென்றிருந்தது. அங்கிருந்து பீ.பீ.சி க்கு செயதி நிறுவனத்திற்கு அங்குள்ள நிலவரம் குறித்து பேட்டி கொடுக்கமுடிந்தது. அப்போது யாழ்ப்பாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பையும், மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் ஒப்பிட்டு நான் கருத்துக்களை கூறியிருந்தேன். இந்நிலையில் இக்கருத்துக்கள் முற்றிலும் நியாயமானவையே என ஒப்புக்கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி இன்று எம்மத்தியில் இல்லை என்பது கவலைமிக்கதே.

புலிகள் தமது வரலாற்றில் இழைத்த மிகப்பெரும் தவறு வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியமையே என பலதடவைகள் என்னிடம் வர்ணித்துள்ள அவர், அதற்காக புலிகள் எத்தனை வருத்தங்கள் தெரிவித்தாலும் அதற்கு ஈடாகாது என உறுதிபடத்தெரிவித்தவர். அரபு வசனங்களை தனது அன்றாட உரையாடலின்போது அடிக்கடி உச்சரிக்கும் அவர் கொழும்பு முஸ்லிம்கள், மட்டக்களப்பு முஸ்லிம்கள், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போன்று பேசிக்காட்டுவதிலும் கைதேர்ந்தவர்.

இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் அவரிடம் கல்விகற்ற முஸ்லிம் மாணவர்கள் பலநூறு பேர். முஸ்லிம் சமூகம் குறித்து மிகவும் பரந்துபட்ட அறிவையும், அனுபவங்களையும் கொண்டிருந்த பேராசியர் சிவத்தம்பி எனக்கு கற்றுத்தந்த மற்றும் பகிர்ந்துகொண்ட அனுவபங்கள், அவருடன் பழகிய அந்த காத்திரமான நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply