‘இராணுவம் தகவல் திரட்டுகிறது’: ததேகூ

இலங்கையின் வடக்கே குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை, வாழ்க்கைத் தர மதிப்பீட்டு பணிகளும் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், குடிசன மதிப்பீட்டுக்கு மேலதிகமாகப் பொதுமக்களின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு திரட்டி வருவதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருக்கின்றது.
சில வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் தகவல்களைத் திரட்டியதையடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது, புள்ளி விபரத் திணைக்களத்தின் ஊடாகப் பாதுகாப்பு அமைச்சு இந்தத் தகவல்களைத் திரட்டி வருவதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான புள்ளிவிபரங்களைப் புள்ளி விபரத் திணைக்களம் திரட்டி வரும்போது, அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் சம்பந்தமில்லாத இராணுவம் பொதுமக்களின் தகவல்களைத் திரட்டுவது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் இராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார் செல்வம் அடைக்கலநாதன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply