‘வட இலங்கை தேர்தல் வன்முறைகள்’
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தல் காலத்தில் இருக்க வேண்டிய பேச்சுச் சுதந்திரம் அங்கு காணப்படவில்லை என்று நீதியானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்திருக்கின்றார்.
”தேர்தல் பிரசாரத்தின்போது, பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்குப் இருக்க வேண்டிய பேச்சுச் சுதந்திரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கே உரிய அம்சங்களையும் அங்கு வெளிப்படையாகக் காண முடியவில்லை” என கூறிய அவர், ஆளும் கட்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சாரக் கூட்டங்களே அங்கு இடம்பெற்றதாகவும், ஏனைய கட்சிகளின் கூட்டச் செயற்பாடுகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.
தேர்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக எட்டு முறைப்பாடுகள் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்குக் கிடைத்திருப்பதாக அங்குள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்தார். இந்த முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எட்டு முறைப்பாடுகளைச் தமது அமைப்பிடம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கீர்த்தி தென்னக்கோன் யாழ் மாவட்டத்து மக்கள் மத்தியில் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகவும், சில கட்சிகள் நன்கு திட்டமிட்ட வகையில் இதனை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அளவெட்டியில் நடைபெற்றபோது, அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு குழப்பப்பட்டதைக் கண்டதாகத் தெரிவிக்கும் கீர்த்தி தென்னக்கோன், கூட்டமைப்பின் மூன்றாவது நான்காவது தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற ஏற்பாடாகியிருந்த இடங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்ததனால் அந்தக் கூட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் அதிக வன்முறைகள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள தகவல்களை அரசாங்கம் மறுத்துரைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply