வாழு வாழவிடு என்றசெய்தியை தமிழ் மக்கள் அரசிற்கு தெரிவித்துள்ளனர்

இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும், நீங்களும் வாழுங்கள், எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள், என்ற எளிமையான செய்தியைத்தான் உறுதியான முறையிலே வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டுள்ள தேர்தல் வெற்றிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாரிய அரச வளங்களின் சட்டவிரோத பயன்பாடு, இராணுவ கெடுபிடி, திட்டமிட்ட வன்முறை ஆகியவற்றுக்கு மத்தியில் வடக்கு, கிழக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். கூட்டமைப்பின் வெற்றியை முறியடித்து, வடகிழக்கில் கணிசமான வெற்றிகளை குவித்து, தமிழ் மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என உலகத்திற்கு அறிவிப்பதற்கு இந்த அரசாங்கம் பகீரதபிரயத்தனம் செய்தது. இன்றைய சர்வதேச சூழலிலே அரசாங்கம் முகங்கொடுக்கும் நெருக்கடிகளிலிருந்து இதன் மூலம் தப்பிவிடலாம் என அரசாங்கம் கணக்குபோட்டது. இதற்காகவே முழுமையான அரசாங்க இயந்திரமும் வடக்கு மாகாணத்திலே முகாமிட்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தது. இந்த உண்மைகளை தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும், நாங்களும் விளக்கப்படுத்தினோம்.

இப்பின்னணியிலேதான் வடகிழக்கிலே தமிழ் மக்கள் தெளிவான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்கள். தெற்கிலே சிங்கள மக்கள் வாழுகின்ற வாழ்க்கை நிலைமைகளுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்குத் தேவையென தமிழ் மக்கள் எடுத்து கூறியுள்ளார்கள். எங்கள் கிராமங்களும், பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். ஆனால் அபிவிருத்தி தொடர்பிலான முடிவுகளை நீங்கள் கொழும்பிலே இருந்து எடுக்காதீர்கள். அந்த அதிகாரங்களை எங்களிடம் தாருங்கள் என தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கூறியுள்ளார்கள். இந்த தீர்ப்பை இலங்கை அரசாங்கம் மதிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது நடத்திக்கொண்டுவரும் பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ள தீர்வுகளை கொண்டுவருவதற்காக பயன்படுத்தவேண்டும். இனிமேலும் புலிகள் கேட்பதை கூட்டமைப்பு கேட்கக்கூடாது என்று தேவையற்ற குற்றச்சாட்டை சுமத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். புலிகளின் கோரிக்கைக்கும், இன்றைய கூட்டமைப்பின் கோரிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய தருணம் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும். போரின் இறுதிக்கட்டத்தின் போது தமிழ் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அச்சுறுத்தல்களையும், உயிர் ஆபத்துகளையும் இன்றளவும் சந்தித்துவருகிறார்கள். இந்த பின்புலத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியான ஆதரவை வழங்கி தேர்தல் பிரசாரங்களில் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்திருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான எங்களது ஆதரவு எந்தளவிற்கு பயன்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நேர்மையுடன் கூட்டமைப்பு தலைவர்களுடன் இணைந்து பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாங்கள் செயற்பட்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மென்மேலும் வெற்றிகளை குவித்து வடக்கிழக்கிலே வாழ்கின்ற மக்களின் தேசிய சக்தியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், அச்சமின்றி வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply