அரசு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆக்கபூர்வமான தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்பதை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாயின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே நடத்தப்படவேண்டும் என்ற செய்தியையும் இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக்கியுள்ளது. இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆக்கபூர்வமான தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவிடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தன்னிகரற்ற ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழர்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற செய்தியை மக்கள் இத்தேர்தல் மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இதுவரை 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இப்பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாக அல்லாமல் ஆக்கபூர்வமான தீர்வொன்றைப் பெறும் முயற்சியாக அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களின் பதவியேற்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply