மூன்று தரப்புக்களும் ஒன்றாக இருந்தால்தான் பிரச்சினைக்கு தீர்வு : ரவூப் ஹக்கீம்
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மூன்று தரப்புக்களும் ஒரே மேசையில் ஒன்றாக இருந்து தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கல்முனை சாஹிறா கல்லூரி தேசியப் பாடசாலையின் க.பொ.த.உயர் தர மாணவர் தின விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்லூரி அதிபர் எம்.எம். இஸ்மாயில் தலைமையில் கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. தௌபீக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில், கொள்கை வகுப்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைவதும் ஒரே மொழி பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அரச கொள்கை வகுப்பின் போது எமக்கு நடக்கும் அநியாயங்களைத் தவிர்ப்பதற்காக கூட்டாக எப்படிப் போராடுவது என்பது சம்பந்தமாகவும் பேச வேண்டிய கால கட்டம் இதுவாகும். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியõக முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற இயக்கமாகத் திகழ்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் ஓர் தெளிவான நிலைப்பாட்டை நேரடியாக எம்மோடு மாத்திரம் கதைத்துத் தீர்த்துக் கொள்ளலாமென்ற நிலைப்பாட்டிலிருந்தால் அது இக்கால கட்டத்திற்கு ஒவ்வாது எம்மால் ஏற்க முடியாத விடயமுமாகும். மூன்று தரப்புக்களும் ஒரே மேசையில் ஒன்றாக இருந்து பேசித்தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதே யதார்த்தமாகும்.
ஏனெனில் இதன் பரிமாணங்கள் வெவ்வேறு கட்டங்களிலுள்ளன. இவை எம்மை மட்டும் பாதிக்கும் விடயங்களல்ல. சில பரிமாணங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் பெரும்பான்மை சமூகத்திற்கும் சில பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இலகுவில் அவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
எனவேதான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்பட்டாலொழிய இந்த நாட்டில் ஒரு போதும் நிலைத்து நிற்கும் தீர்வை அடைய முடியாது, இதுவே தெளிவான விடயமாகும்.
தவிரவும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அம்பாறை மாவட்டத்தின் கரையேõரப் பகுதிகள் உச்ச நிலைக்கு வந்துள்ளதுடன் அதிலும் இலங்கை முஸ்லிம்களின் கல்வியில் கல்முனை சாஹிராக் கல்லூரி கலங்கரை விளக்காகத் திகழ்வது கண்டு நாம் பெருமையடைவதுடன் பாராட்டையும் தெரிவிக்கின்றோம்.
இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அதிபர், ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம். 64 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு இக்கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் விதந்து பாராட்டத்தக்கதாகும்.
படிப்பிற்கு வயது எல்லை கிடையாது, எல்லையில்லாமல் படிக்க வேண்டும். பல்கலைக்கழகம் மட்டுமின்றி அதற்கு அப்பாலும் படிப்பு இருக்கின்றது. தொடர்ந்தும் நம் மாணவர்கள் முன்னேற வேண்டும்.
இப்பொழுதுள்ள போட்டி, கள நிலைவரம் மிக வித்தியாசமானது, உலக சந்தையில் மனித வளத்திற்கு இருக்கின்ற கிராக்கியும், போட்டியிலும் இலங்கையின் மனித வளத்திற்கு இருக்கின்ற சிறப்பையும் பெருமையாக நாம் பேசிக் கொள்கின்றோம்.
எங்கு போனாலும் துறை சார்ந்த பல நிபுணர்கள் எம் சமூகத்திலும் தமிழ் சமூகத்திலுமுள்ளனர். இத்தகையவர்களது அத்தனை திறமைகளும் இந்த நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும். மூளைசாலிகளின் வெளியேற்றம் பற்றி நாமறிவோம், இவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு உள்வாங்குவது எப்படி என்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.
இந்த நிலையில் தான் அரச ஆட்சேர்ப்புக்கு இன விகிதாசாரமா? இல்லை திறமை அடிப்படையா என்பதில் தெளிவில்லாத நிலையில் நாமுள்ளோம். தேசிய மட்டத்தில் ஒரு கொள்கை, மாகாண மட்டத்தில் இன்னொரு கொள்கை என்று குழப்ப நிலையில் கொள்கை வகுப்பு செய்ய முடியாது.
இதேபோன்றே அரசியல் தீர்வு விடயமுமுள்ளது. எனவே இணைந்து செயற்பட்டாலொழிய இந்த நாட்டில் ஒரு நாளும் நிலைத்து நிற்கும் தீர்வை அடைய முடியாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply