உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல்: பல அமைப்புக்கள் கண்டனம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன வன்மையாக கண்டித்திருக்கின்றன. இந்தத்தாக்குதலை மூர்க்கத்தனமான தாக்குதல் என வர்ணித்துள்ள ஆர்.எஸ்.எவ். என்ற சர்வதேச ஊடகத்துறை நிறுவனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மீது விரைவான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியுள்ளது.

குகநாதன் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள வன்முறையானது அவர் பிழைத்துவிடக் கூடாது என்ற அவரைத் தாக்கியவர்களின் தீர்மானத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சுதந்திரமான, பன்முகப்படுத்தப்பட்ட ஊடகச் செயற்பாட்டை உருவாக்குவதற்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கு குற்றங்களில் இருந்து தப்பிச் செல்வதை முறியடிப்பதே முதல் படியாக அமையும் என்றும் ஆர்.எஸ்.எவ். நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பல ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அஞ்ஞாதவாசம் செய்ய வைத்த நிலைமை கடந்த ஒரு வருட காலமாகத் தணிந்திருந்தது. இந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான புதிய வன்முறை அலையொன்றின் ஆரம்பமாக குகநாதன் மீதான இந்தத் தாக்குதல் அமைந்துவிடக் கூடாது என்றும் ஆர்.எஸ்.எவ். நிறுவனம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

குற்றங்களில் இருந்து தப்பிச் செல்ல அனுமதிப்பதானது குற்றமிழைப்பவர்களுக்கு மேலும் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கான ஊக்குவிப்பாக அமைந்துவிடும் என்பதை அதிகாரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்கள் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கையில் குறைந்துள்ளதாகக் காணப்பட்ட போதிலும் அவர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகள் தொடர்வது சாதாரணமாக இருக்கின்றது. இந்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக நீதித்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஆர்வம் காட்டாதிருப்பதே இதற்குக் காரணம் எனவும் ஆர்.எஸ்.எவ். நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குகநாதன் மீதான தாக்குதல் தொடர்பாகவும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதிலும் அதிக அக்கறையும் கரிசனையும் வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான குழுவின் பிரதி பணிப்பாளர் ரொபர்ட் மஹோனி, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கியுள்ள இலக்கு வைத்துத் தாக்கப்படுவது, அவர்கள் கொலை செய்யப்படுவது, அவர்கள் காணாமல் போவது தொடர்பில் இலங்கை அதிகாரிகள் நீண்ட காலமாகவே பராமுகமாக இருந்து வருகின்றார்கள் என குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.என்.எம். அமீன் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தை மீண்டும் பயங்கரமும் வன்முறையும் நிறைந்த சூழலுக்கே இட்டுச் செல்ல வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது பற்றி கூறுகையில், இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும் பல தாக்குதல்கள் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும் இவை தொடர்பில் எவருமே கைது செய்யப்படவுமில்லை, முறையான விசாரணைகள் நடத்தப்படவும் இல்லை. இந்த நிலையில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நாட்டுக்கு அபகீர்த்தியையே கொண்டு வரும் என தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாக்குதல் சம்பவங்கள், இளைஞர்கள், நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை ஏற்பதற்கு மறுக்கும் நிலைக்குக் கொண்டு செல்வதுடன் மேற்படி தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதுடன் தேசிய ஒற்றுமையையும் கேள்விக்குறிக்குள்ளாக்கச் செய்துவிடும் என ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply