புலிகளின் தளபதிகள் சரணடைவது தொடர்பில் யாரும் தொடர்புகொள்ளவில்லை : கோத்தபாய

யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் புலிகளின் தளபதிகள் சரணடைவது தொடர்பில் என்னுடன் யாரும் தொடர்பு கொள்ள வில்லை. இயற்கைக்கு ஒவ்வாத வகையில் போலிக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தும் அடிப்படை தன்மையற்ற நிழல் சாட்சியங்களை முன்வைத்தும் “சனல் 4′ தொலைக் காட்சியும் சர்வதேசமும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள முகாம்களில் புலி உறுப்பினர்கள் தஞ்சமடை ந்துள்ளனர். ஆனால், அந்த நாடுகள் அவர்களின் பெயர் விபரங்களை தரமறுக்கின்றன. இதனால், புலம்பெயர்ந்து தமிழர்களுடன் இணைந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான நடவடிக்கைகள் உண்மை பகுப்பாய்வு என்ற தலைப்பிலான அறிக்கையை நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டது. ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 30 ஆண்டு கால கொடூரமான பயங்கரவாதத்தை இலங்கை இராணுவம் மிகவும் தியாகபூர்வமாக செயற்பட்டு முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இனப் பிரச்சினைகளுக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இராணுவ ரீதியில் அல்லாது பல பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வையெட்ட புலிகளுக்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. போர் நிறுத்த ஒப்பந்தம், சமாதானப் பேச்சுவார்த்தை என பல சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தினால் சர்வதேசத்தின் பங்களிப்புடன் முன் வைக்கப்பட்டன.

ஆனால் புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை. குறிப்பாக 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை புலிகள் உதாசீனம் செய்து இக்காலப் பகுதியில் இராணுவ உயர் நிலை அதிகாரிகள் தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பொது மக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். அது மட்டுமன்றி அக்காலப் பகுதியில் புலிகள் தனது ஆள் பலத்தையும் ஆயுதப் பலத்தையும் அதிகரித்துக் கொண்டு பேச்சு வார்த்தைகளை சீர்குலைத்து வந்தனர்.

அரசாங்கம் 2006 ஆம் ஆண்டில் புலிகளை தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்த போதிலும் ஆயுதத்தை நம்பி பேச்சுக்களை புறக்கணித்தது மட்டுமன்றி மாவிலாறு அணைக்கட்டை மூடி மூவின மக்களையும் பாதிப்படைய வைத்தனர். இதனால் பொறுமையிழந்த அரசு மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்து வடக்கு மற்றும் கிழக்கை மீட்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியது.

வடக்கு கிழக்கு நிலப்பரப்பையும் அங்கு வாழ்ந்த அப்பாவி தமிழ் மக்களையும் மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டு அதில் வெற்றி கண்ட மனிதாபிமான நடவடிக்கையையே இன்று சனல் 4 உட்பட சர்வதேசம் குறை கூறி வருகின்றன. இதற்கு பிரதான காரணமாக அமைந்தது புலம் பெயர் தமிழர்களும், அவர்களுடன் இணைந்துள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்புமே ஆகும்.

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் காலப் பகுதியில் பெரும் தொகையான மக்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக வழிநடத்தப்பட்டார்கள். அதுமட்டுமன்றி 11 ஆயிரம் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களுள் 595 பேர் சிறுவர் போராளிகளாகவும் 6100 பேர் வயது முதிர்ந்த போராளிகளாகவும் காணப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அத்தோடு புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெற்றோர்கள், சூசை மற்றும், தமிழ் செல்வனின் மனைவி, பிள்ளைகள் உட்பட தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை அரசு பராமரித்து வருகின்றது. இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்காது சர்வதேசம் குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்?

40 ஆயிரம் சிவிலியன்கள் மனிதாபிமான நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இத்தரவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை உறுதியுடன் கூற முடியும். யுத்தத்தைக் காரணம் காட்டி பலர் வடக்கு கிழக்கில் இருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களுடன் புலிகளும் ஊடுருவிச் சென்றனர். இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, சைபிரஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள முகாம்களில் இவர்களும் பெரும்பாலானோர்கள் உள்ளனர். இவர்களின் தரவுகளை குறிப்பாக சில நாடுகள் இலங்கைக்கு வழங்க மறுக்கின்றன.

எவ்வாறாயினும் சரணடைந்த புலி போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இது மட்டுமன்றி யுத்தத்தில் இறுதிக் காலப்பகுதியில் பாரிய போர் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன எனக் கூறி சர்வதேசம் குற்றம் சுமத்துகையில் அதற்கு சாதகமாக சனல் 4 வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானதும் உண்மைகளை மறைத்து தேவைக்காக போலி குற்றச்சாட்டுகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது.

சரணடைவது தொடர்பில் புலி தளபதிகள் பாதுகாப்புச் செயலாளர்கள் என்ற வகையில் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. சரணடைந்தவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளார்கள். மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் காலப்பகுதியிலும் வடக்கிற்கு உணவு, மருந்து வகைகள் உட்பட அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் இலங்கை அரசு அப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதனையும் மறைத்து சனல் 4 ஒளிபரப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. எந்த வகையிலும் சனல் 4 போலி ஒளிபரப்புக்களிலிருந்து தப்பி விட முடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply