மத்திய அரசின் சரிபாதி அதிகாரங்கள் தமிழருக்கு வேண்டும்: திஸ்ஸ
மத்திய அரசாங்கத்தின் சரிபாதி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரும் சர்வகட்சி குழுக்களின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தினார்.
நல்லாட்சியையும் அரசியல் தீர்வையும் உறுதிப்படுத்தாமல் இலங்கையால் ஒரு போதும் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது. எனவே தேசிய இலக்குகளில் சிறுபான்மை இன மக்கள் உள்வாங்கப்பட வேண்டுமாயின் அவர்களின் சுயகௌரவம் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியீட்டிய லங்கா சம சமாஜக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று புதன்கிழமை விஞ்ஞான அலுவல்கள் அமைச்சின் அமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸவிதாரண முன்னிநிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், இதுவரையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் 42 பேர் லங்கா சம சமாஜக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எவ்விதமான அதிகாரங்களையும் தேசிய வளங்களையும் மோசடி செய்யாது நேர்மையாக செயற்பட்டு மக்களின் ஆதரவை எமது கட்சி உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கவிடயமாகும்.
இன்று இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மிகவும் பழைமை வாய்ந்தது லங்கா சம சமாஜக்கட்சியாகும். பிரிட்டன் ஆக்கிரமிப்பில் இலங்கை இருந்தபோது இந்தியாவின் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தது லங்கா சம சமாஜக் கட்சி என்பதை வரலாறு கூறும்.
இதுவரை காலமும் எமது கட்சிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றதில்லை. ஏற்றத்தாழ்வு அற்றதும் சகலருக்கும் சுதந்திரமான கொள்கையுடன் இன்றும் எமது கட்சி தேசிய அரசியலில் செயற்படுகின்றது. எந்தவொரு இனமும் வேடர்களைப் போல் நடத்தப்படக்கூடாது.
இன்று மேற்குலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. தேசியத்துவத்தை மையப்படுத்திய பொருளாதார கொள்கைகளை முன்னெடுப்பதும் அவசியமாகியுள்ளது. இலங்கை, பொருளõதார இலக்கை அடைய வேண்டும் என்றால் ஊழல்மோசடிகள் அற்ற நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி சகல இன மக்களும் சுய கௌரவத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அபிவிருத்திகளில் மட்டும் அப்பிரதேச மக்கள் பூரணமடையவில்லை.
மாறாக அரசியல் ரீதியாக பூரணமடைய வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இதனாலேயே கூட்டமைப்பினரை அப்பிரதேச மக்கள் ஆதரித்துள்ளனர். எனவே தமிழர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகும். அதிகாரப் பகிர்வு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அது மட்டுமன்றி மத்திய அரசின் அதிகாரத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு பங்கு இருக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply