அமெரிக்க விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலானது
அமெரிக்காவின் போர் விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் ஊடுருவியமை தற்செயலாக இடம்பெற்ற சம்பவமாகும். இந்த ஊடுருவலில் வேறு எந்த நோக்கங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார். இலங்கை வான் பரப்புக்குள் அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் அண்மையில் ஊடுருவியிருந்தன. இந்த செயற்பாடு குறித்து அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவுள்ளது. இது குறித்து கேட்டபோதே விமானப்படையின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் அமெரிக்க விமானப்படையின் 7ஆவது படையணிக்கு சொந்தமான 10 போர் விமானங்களைக் கொண்ட அணியொன்று இலங்கை வான்பரப்பில் 380 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஊடுருவியதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் விமானப்படை தொடர்புகொண்டதையடுத்து தமது படைப்பிரிவு பயிற்சியில் ஈடுபடுவதாகவும் இதன்போதே தற்செயலாக இலங்கை வான்பரப்புக்குள் விமானங்கள் வந்ததாகவும் அவர்கள் எமக்கு அறிவித்தனர்.
இலங்கை விமானப்படை தலைமையகம் இலங்கை எல்லைக்குள் ஊடுருவிய போர் விமானங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இலங்கை எல்லைக்குள் ஊடுருவியமை தொடர்பில் அறிவித்ததையடுத்து அந்த விமானங்கள் இலங்கை எல்லைக்கு வெளியே சென்றுவிட்டன. இதுதொடர்பாக பதற்றம்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை வான் பரப்பிற்குள் அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் அண்மையில் ஊடுருவியமை குறித்து அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சுக்கூடாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதகரத்திடம் இந்த ஆட்சேபனை தெரிவிக்ககப்படும் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் சமுத்திர வான் பரப்பின் மீதா அல்லது நிலப்பரப்பிற்கு மேலான வான் பரப்பின்மீதா ஊடுருவின என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிக்கிறோம் என சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களின்படி, நாட்டின் வரப்பை எவரும் பயன்படுத்த வேண்டுமானால் விமானப் பயணத்திட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதேவேளை, அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் வான் பரப்பிற்குள் அவ்வப்போது ஊடுருவுவதாக தம்மை இனங்காட்ட விரும்பாத விமானப்படை சிரேஷ்ட அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டுள்ளார். வெளியேறுமாறு அவர்களுக்கு நாம் கூறிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
மேற்படி விமானங்கள் விமானந்தாங்கி கப்பலைத் தளமாகக் கொண்டவை எனவும் இவை அமெரிக்காவின் 7ஆவது படைப்பிரிவின் விமானங்கள் என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் மிக உயர்ந்த மலையான பேதுருதாலகால மலைச்சிகரத்திலுள்ள வான் கண்காணிப்பு நிலையமே மேற்படி அமெரிக்க விமானங்களின் ஊடுருவலை முதலில் கண்டறிந்தது. அதன்பின் சிவில் விமான அதிகார சபைக்கும் இலங்கை விமானப் படைக்கும் தகவல் கொடுக்ககப்பட்டது.
இவ்விமான ஊடுருவல் விடயம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் மறுப்புத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply