சீனாவின் உதவியை ஜனாதிபதி நாடுவார்
சீனாவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு மேற்கு நாடுகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு எதிராகவும் உலகளவில் உருவாகி வரும் நிதி நெருக்கடியில் இலங்கைக்கு உதவும் வகையிலும் சீனாவின் ஆதரவை கோருவார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஹுஜின்தாவோவையும் பிரதமர் வென்ஜியாபோவையும் பீஜிங்கில் சந்திப்பார். பொருளாதார ஒத்துழைப்பில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி திங்கட்கிழமை தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆகக்கூடுதலான உதவி வழங்கும் தனியொரு நாடாக சீனா உள்ளது. அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்திற்கும் நுரைச்சோலையில் அனல் மின் நிலையத்திற்கும் சீனா நிதி வழங்கியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்நிர்மாணத்திற்கு சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்க ஒத்துக்கொண்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு நிலையிலும் வாக்களிக்கப்பட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் விரும்புகின்றனர் என கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர் கூறினார். யுத்தக் குற்றம் தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் இவர் மீது பிரயோகிக்கும் அழுத்தத்தில் ஜனாதிபதி மிகவும் குழம்பியுள்ளார் என அரசியல் விமர்சகரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன அரசியல் நல்லிணக்கம் இன்னும் எட்டாத ஒன்றாகவே காணப்படுகின்றது. மே 2009 இல் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் உண்டான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஆராயவேண்டுமென நடத்தப்படும் மும்முரமான சர்வதேச மட்ட இயக்கத்துக்கு நாடு முகம் கொடுத்து வருகிறது. சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த பிரச்சினையில் ராஜபக்ஷவின் பக்கத்தில் இருந்தன.
இலங்கையில் உள்நாட்டு விசாரணை அமைப்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் நவம்பர் 15 இல் பெற்றுக்கொண்ட பின் அதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கவேண்டுமென இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இது நடக்குமாயின் இலங்கை யுத்தத்தை நடத்திய முறை பற்றி காரசாரமான விமர்சனங்கள் மார்ச்சில் நடக்கவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இடம்பெறலாம். இதன் மூலம் இலங்கை இதுவரை மறுத்து வரும் வெளிவாரி விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரும் இயக்கம் வலுப்பெறும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply