கோட்டாபய மீது சீறிப் பாய்கிறார் ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும் தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலித தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் விமர்சனத்தால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பதிலளிக்கையில்:-

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் யுத்தத்தின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப்படுகொலையை நடத்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், அது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோட்டாபய ராஜபக்ஷ் கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும் மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட யுத்தப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது, என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை இராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.

அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ்.

கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசைவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம், மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷ், வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; யுத்தகுற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார். இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான்.

இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு யுத்த குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ், நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் யுத்தகுற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,“யுத்த குற்றங்கள் நிகழ்த்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply