சீனாவில் ஜனாதிபதிக்கு கலாநிதி பட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன பீஜிங் நகரிலுள்ள வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்தது. அதேநேரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் இலங்கை ஆய்வுப் பிரிவின் தலைவராகவும் ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது,ஒரு நாடு அதன் அபிவிருத்தியை அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் கலாசாரம், அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்பகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் சீனாவிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அமைதி மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துதல், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துதல், இலங்கைக்கும் சீனாவுக்கும்

இடையிலான நட்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தல் ஆகியவை இந்த கெளரவ பட்டம் வழங்கப்படுவதற்கு காரணியாகியுள்ளன.

பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோற்கடித்ததன் பின்னர் நாம் துரிதமாக எதிர்பார்த்திருக்கும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கு சீனா குறிப்பிடத்தக்க வகையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை தொடர்பாக இலங்கை மக்கள் தமது நன்றியை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

ரோம சரித்திராசிரியர்கள் இலங்கை- சீன உறவுகள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதன் படி 4ம் நூற்றாண்டில் சீன இனத்தவரான பாஹியனின் வருகை, கடல் ரீதியான வர்த்தகம் மட்டுமன்றி 1952 ல் செய்து கொள்ளப்பட்ட இறப்பர்- அரிசி ஒப்பந்தம் மற்றும் 1957 ல் இடம்பெற்ற தூதுவர் தொடர்பு மூலம் இலங்கை- சீன உறவுகள் மேலும் வலுவடைந்தன என்று அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து பீஜிங் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் இலங்கை ஆய்வு நிலையமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். இந்த ஆய்வு நிலையத்தின் தலைமைப் பதவியை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் சென் யுலு ஜனாதிபதிக்கு வழங்கினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எடுக்கப்படும் நடவடிக்கையானது. இலங்கையின் கல்வித் தரத்தை உயர்த்துவது மட்டுமன்றி உலகில் சமாதானத்தை ஏற்படுத்தவும் காரணமாவதாக பீஜிங் வெளிநாட்டு பாசைகளுக்கான பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆசிரிய குழுவின் தலைவருமான சென்யுலு கூறினார். இந்த பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோன்று ஜனாதிபதியும் பல்கலைக்கழகத்துக்கு நினைவுப் பரிசில்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தில் சிங்கள பாஷையிலும் சீன மாணவர்களுடன் ஜனாதிபதி அளவளாவியதுடன் சீன நட்புறவை நினைவுபடுத்தும் வகையில் அங்கு ஒரு மரச்செடியையும் நாட்டிவைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply