இலங்கை அரசு, தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது: சுரேஸ்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரமிக்க சகோதரரான் கோத்தபாய தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை இல்லை என்கிறார். மற்றொரு சகோதரரான பஸில் ராஜபக்ஷவோ, பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும் என்கிறார். இவர்களில் எவரின் பக்கம் தான் இருக்கிறார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதால் இனி தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுகள் எதுவும் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சி அரசமைப்பு முறை மாற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வலியுறுத்தி வரும் நிலை யில், நடைமுறையில் இருக்கும் அரசமைப்பின் கீழேயே இரு இனங்களும் சேர்ந்து வாழ முடியும் என்று கோத்தபாய ராஜபக்ஷ அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

‘இந்த அரசமைப்பு, அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது. அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் ஏற்கனளூவ போதியளவு வழங்கப்பட்டு விட்டது. இதைவிட தமிழர்களுக்கு மேலதிகமாகக் கொடுக்க வேண்டிய தேவை ஏதுமில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அவரது பேட்டி வெளியாகி 5 நாள்களின் பின்னர் தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இனப் பிரச்சினைக்குத் தெரிவுக்குழு ஊடாக 6 மாதங்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்றார்.

‘அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். 6 மாதங்களுக்குள் தீர்வை எட்டவேண்டும் என்று அதற்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குழுவின் முடிவு நாடாளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதித் தீர்வு தயாரிக்கப்படும்” என்று பஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

‘மஹிந்த ராஜபக்ஷவின் ஒரு சகோதரர் சொல்கிறார், எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று; மற்றொரு சகோதரர் சொல்கிறார் தமிழர்களுக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்களே போதும் என்று. இவர்களில் எவரின் பக்கம் ஜனாதிபதி இருக்கிறார் என்பதே எமது கேள்வி” என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கோத்தபாயவின் உறுதியான கருத்துக்களைப் பார்க்கும்போது இலங்கை அரசு தமிழ் மக்களையும் ஏமாற்றி உலகையும் ஏமாற்றுகிறது என்றே உணர முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ‘அதேசமயம் ஒரு ஜனாதிபதியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள, இரு சகோதரர்களும் இருவேறு விதங்களில்  மாறுபட்ட கருத்துக்களுடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதால் அரசு மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு முகம், சிங்கள மக்களுக்கு ஒரு முகம், உலகத்துக்கு இன்னொரு முகம் என்று ஆரம்பம் முதலே அரசு நம்பகத்தன்மை அற்ற விதத்திலேயே செயற்பட்டு வருகின்றது.

எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு ஏற்ற அரசியல் நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply