புலிகள் அமைப்பை அடுத்தவாரம் தடைசெய்ய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன?
கிளிநொச்சியை அரசாங்கப் படைகள் கைப்பற்றியிருக்கும் சூழ்நிலையில் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அமைய அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது பற்றி அரசாங்கம் சட்ட வல்லுனர்களுடன் கலந்துரையாடி வருவதாகக் கூறப்படுகிறது.
வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் அனைவரையும் புலிகள் விடுவிக்கவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், புலிகள் அமைப்பை தடைசெய்வது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுமக்களை புலிகள் தடுத்துவைத்திருக்கும் விடயம் பற்றிக் கலந்துரையாடப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த வோண்டுகோளுக்கு புலிகள் மதிப்பளிப்பார்களா என்பதை அவதானித்து வருகின்றோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் தடைசெய்வது பற்றி தீர்மானம் எடுப்போம். பொதுமக்கள் தரப்பிலிருந்து எமக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்றார் ரம்புக்வெல.
இதேவேளை, தமிழர்களின் சட்டப்படியான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கமும், புலிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக்க நேற்றுக் கோரிக்கை விடுத்திருந்தது. புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கம் தடைசெய்யுமாயின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான பாதைகள் அடைக்கப்பட்டுவிடும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தலதாமாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு முதலில் தடைசெய்யப்பட்டது. பின்னர், 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அந்தத் தடை நீக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply