சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது: பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக் குழுவினர் தயாரித்த தருஸ்மன் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) பரிசீலனைக்கு சமர்ப்பிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தருஸ்மன் அறிக்கை ஒரு உத்தியோகபூர்வ ஆவணமோ, சட்டபூர்வமான ஆவணமோ அல்ல. எனவே, அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அருகதையற்றது என்று பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலங்கையில் நெருக்கடி நிலை நீங்கிய பின்னர் நாட்டை எதிர்நோக்கும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நாலாவது கருத்தரங்கில் உரைநிகழ்த்திய பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், இந்த தருஸ்மன் அறிக்கையை முழுமையாக அல்லது அதனை சிறு சிறு அங்கங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது ஒரு தவறான மற்றும் இலங்கைக்கு மட்டுமல்ல பொதுவாக சர்வதேச சமூகத்திற்கே தீங்கிழைக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் குழுவினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையை மீறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவித்திருப்பது கண்டனத்திற்குரிய விடயமென்றும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவினர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணைக்கு அமைய அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு மெளனம் சாதித்திருக்க வேண்டும். அதைவிடுத்து தங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களுக்கு கருத்து தெரிவிப்பது தவறு என்றும் கூறினார்.
நேர்மையான முறையில் நெறியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் மாத்திரமே தங்கள் எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை இருக்கின்றதே ஒழிய வெளிநாட்டு சக்திகளுக்கு இதில் எவ்விதத்திலும் தலையிட முடியாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ள ஒரு சிலர் தங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈயுடனான நெருங்கிய தொடர்பு காரணமாக எமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கினரென்று என்று சொன்னார்.
வடக்கிலுள்ள மக்களுக்கு நல்வாழ்வை பெற்றுக் கொடுப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை சீர்குலைப்பதற்கு இந்த வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.
யுத்தத்தின் பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் சொந்த இடங்களில் இப்போது மீள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். சுமார் 10ஆயிரம் பேர் மட்டுமே இன்னும் மீள் குடியமர்த்தப்படாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களும் இவ்வாண்டு முடிவடைவதற்குள் குடியமர்த்தப்படுவார்கள். தற்போது வடபகுதியில் உள்ள 95சதவீதமான பாடசாலைகள் இயங்குவதாகவும், அப்பிரதேசத்தில் 90சதவீதமான நீர்பாசன வசதிகளுடைய காணிகளிலும் விவசாயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
அங்குள்ள ஆஸ்பத்திரிகளும், வைத்திய வசதிகளும் இப்போது சிறப்பாக இருப்பதாகவும் வடபகுதியின் கடற்றொழிலும் இன்று சிறப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறதென்றும் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் ஆயுதப் படை வீரர்கள் இன்று நாட்டின் மேம்பாட்டுக்கான பலதரப்பட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
இவ்வைபவத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் பிரதம தளபதிகளும், முப்படை தளபதிகளும், பொலிஸ் மாஅதிபரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply