அவசரகால சட்டத்தை நீக்கும் தீர்மானத்துக்கு நன்றி: ரணில்

அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கும் தீர்மானத்தை நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நன்றிகளைத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடகாலமாக எதிர்க்கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைவேறியதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். அரசாங்கத்தின் இந்த வரலாற்றுத் திருப்பம் மிக்க தீர்மானத்தை பாராட்டி எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்திற்காகவே அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. யுத்தம் முடிவடைந்து கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்பே நாம் அவசர கால சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரியிருந்தோம். எனினும், தற்போது அது நீக்கப்பட்டமை மகிழ்ச்சி தருகிறது.

2009 மே மாதத்தோடு புலிகள் ஒழிக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்பட்டுவிட்டது. இனி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. அப்பிரச்சினையை இழுத்தடிக்காமல் விரைவில் அதற்குத் தீர்வு காண்பது அவசியமாகின்றது. பேச்சுவார்த்தைகள் தொடரப்படுவதற்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டால் வெளி அழுத்தங்களின்றி தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply