சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினையை எடுத்துரைத்த பெருமைக்குரியவர்

தமிழ்த்தேசிய இனத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (26 ஆகஸ்ட்1927) அவர்கள் பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவுகூரும் வகையில் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

நமது அண்டைநாடாகிய இந்தியா 1947ஆம் ஆண்டு இரத்தக்களரி மத்தியில் சுதந்திரமடைய இலங்கையோ எவ்வித களரியுமின்றி ஆட்சி மாற்றத்தைப்பெற்றது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலான இந்திய வரலாற்றையும் அங்கு ஏற்பட்ட நிகழ்வுகளையும் உற்றுநோக்கும் போது பல தேசிய இனங்களைக் கொண்ட அந்நாடு பல்வேறு சவால்களை சமாளித்து உலகில் சனத் தொகை கூடிய ஜனநாயக நாடு என்ற நற்பெயரையும் பெற்றுவிட்டது. காரணம் காலத்திற்கேற்ப பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கேற்ப அரசியல் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக இனங்கண்டு தீர்க்கப்பட்டதாகும்.

இன்று இந்தியாவில் மத்தியில் பாராளுமன்ற ஆட்சியோடு மாநில அரசுகளுக்கு மத்தியில் மக்களை நிர்வாகத்தில் பங்காளிகளாக்கும் வண்ணம் பஞ்சாயத்து ஆட்சி முறையும் அமுலில் உள்ளது.
சுருங்கக்கூறின் அரசியல் அதிகாரம் பல்வேறு படிமுறைகள் மூலம் மக்கள் மத்தியில் பகிரப்பட்டு அவர்களையும் அரச நிர்வாகத்தில் பங்காளிகளாக்கியமையே இந்திய ஜனநாயகத்தின் வெற்றியாகக் காணப்படுகின்றது.

ஒற்றை ஆட்சி அமைப்பு தேசிய இனங்களின் தனித்துவத்தைப் பாதுகாக்க உதவாது என்று தீர்க்க தரிசனமாக உணர்ந்தவர்தான் தந்தை செல்வநாயகம்.

தமிழ் மக்களின் உரிமைக் குரலாகத் தமிழரசுக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு இயக்கமாக ஸ்தாபிக்கப்பட்டது. இதில் தந்தை செல்வாவின் தளபதிகளாக இணைந்த பலரின் பங்கு காத்திரமானவை.அவர்கள் சொத்துக்களை,சுகங்களைப் பொருட்படுத்தாது இன விடுதலையாகிய வேள்வித் தீயிற்கு ஆகுதி ஆனார்கள்.இவர்களின் இளம் அமிர்தலிங்கம் ஒப்பற்றவர். 1927ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள பண்ணாகத்தில் பிறந்தவர்.1945 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் புகுந்து பட்டதாரி ஆகி பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1951 ஆம் ஆண்டு வழக்கறிஞரானார். மாணவனாக இருந்த போதே தமிழ் உணர்வால் உந்தப் பட்டவர்.

பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கி அதன் தலைவரானதோடு சட்டக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சிற்பியாக அதன் முதல் தலைவரான பெருமைக்குரியவர்.இத்தகைய பெருமைக்குரிய இளைஞன் அமிர்தலிங்கம் தமிழரின் உரிமைக்காகப் போராட உதயமான இயக்கத்தில் இணைந்தது வியப்பன்று. 1950 ஆம் ஆண்டு தலைவர் அமிர்தலிங்கம் உருவாக்கிய வாலிப முன்னணி நாளடைவில் வலுப்பெற்றதோடு 1970களில் உருவான தமிழ் இளைஞர் பேரவையின் முன்னோடியும் கூட.

இப்பேரவைதான் துப்பாக்கி முனையில் போராட முனைந்த இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி.தமது வாழ்க்கையாலும், தன்னல மற்ற செயற்பாடுகளாலும் தம்முடன் இணைந்த மங்கையர்க்கரசியின் உணர்ச்சிமிக்க பாடல் களாலும்,வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்களை இவர்களால் கவர முடிந்தது. அமிர்தலிங்கத்தாலும் இவருக்குத் தெரியாத கிராமங்களே இல்லை. தமிழரின் போராட்டத்தினால் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களையும் இணைத்த பெருமையும் இவருக்குண்டு.அமிர்தலிங்கம் இணைந்த தமிழரசுக்கட்சியின் உரிமைப் போராட்டத்திற்கு பழக்க மான பதங்களாக சத்தியாக்கிரகம்,ஒத்துழையாமை, ஹர்த்தால்,கதவடைப்பு,சிறைவாசம் ஆகியன விளங்கின. இளைஞனாக இந்தப் பெரிய அஞ்சலோட்டத்தில் இணைந்து இறுதிவரை சளைக்காது ஓடிக் காலனின் பிடியில் மட்டும்தான் (1989 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி செய லிழந்த மாவீரன் தலைவர் அமிர்தலிங்கம்.கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் சளைக்காது பங்காளியாகி பல்வேறு சந்தர்ப்பங்களில் இரத்தம் சிந்தியதோடு இவர் அடைந்த இன்னல்களும் பல.கொடுத்த விலைகளும் மிக அதிகம்.

1956 இல் காலிமுகச் சத்தியாக் கிரகத்தில் இவரும் ஏனைய தலைவர்களும் தாக்கப்பட்டனர்.தாக்கியவர்கள் தலைவர் அமிர்தலிங்கத்தின் மண்டையைச் சரிபார்த்தனர்.இரத்தம் வழியப் பாராளுமன்றம் சென்று தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக அவர் உரையாற்றிய போது அன்றைய பிரதமர் அமிர்தலிங்கத்தின் இரத்தம் தோய்ந்த மண்டையைக் கண்டு கேலியாக போராட்டத்தின் வடுக்கள் என வர்ணிக்கவும் தவறவில்லை.தனிச்சிங்கள மொழிச்சட்டத்தின் விவாதத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனிச்சிங்களத்தை உமது தொண்டையில் திணிப்பேன் என்று கூறியபோது தலைவர் அமிர்தலிங்கம் உமிழ்ந்து உம் முகத்தில் துப்புவேன் என்று சுடச்சுடச் சொன்ன வரலாறும் உண்டு.

தலைவர் அமிர்தலிங்கம் ஜனநாயக ரீதியில் நமது பிரச்சினை தீரப்படவேண்டும் எனத் திடமாக நம்பியவர்.எமது பிரச்சினை பற்றி பாராளுமன் றத்தில் இவர் ஆற்றிய உரைகள் காத்திரமானவை கனதிமிக்கவை.

இக்காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் பல.அவருக்கெதிராக நயல் அற்பார் வழக்கு தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆளும்கட்சியினரால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவர் தூசிக்கப்பட்டார். பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பற்றி நன்றி உணர்வோடு சிறிமாவோ பண்டாரநாயக்க பின்வருமாறு கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.அன்று அவர் கூறியது இதுதான்.
நான் பிரதமராக இருந்து செயற்பட்ட அரசாங்கங்களின்போது அமிர்தலிங்கம் அவர்களோடு பழகிச்செயற்படும் வாய்ப்புக்கிட்டியது.அவரோடும் அவரது கட்சியோடும் எமக்கு அரசியல் வேறுபாடுகள் இருந்தன.

எமது அரசாங்கத்தின் 12 வருடஆட்சியில் அவரை 3 முறை சிறையில் அடைத்திருக்கிறேன். இருந்தும் எம்மீது எதுவித காழ்ப்புணர்ச்சியுமின்றி நமது குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது நமக்காக அவர் வாதிட்டதை நம்மால் மறக்க முடியாது.நாளடைவில் அவர் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதியாகிப் பல பாராளுமன்ற அங்கத்தவர்களினதும் ஆலோசனைக்கும் உரியவரானார்

தலைவரின் வாழ்க்கையில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஆற்றிய உரைகள் நமது தேசியப் போராட்டத்தின் மைல்கல்கள். இவருக்கு அனுசரணையாக இருந்த ஈ உடுப்பிட்டிச்சிங்கம் என வர்ணிக்கப்பட்ட தலைவர் மு.சிவ சிதம்பரத்தின் ஒத்துழைப்பும் அனுசர ணையும் என்றும் நினைவுகூரத்தக்கவை.இரட்டையர்களான இவர்களின் பாராளுமன்ற தரிசனம் தமிழ்மக்களால் என்றும் மறக்க முடியாதவை. அன்றைய அரசுக்கு தலைவர் அமிர்தலிங்கம் கூறியது இதுதான்.தாம் தனித்தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்துடன் பாராளுமன்றம் வந்தாலும் மாற்றீடாக ஒரு காத்திரமான அரசியல் தீர்வை அரசு வைத்தால் அதனைப் பரிசீலிக்கத் தயார் என்பதாகும்.

அன்று ஒரு காத்திரமான அரசியல் தீர்வை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முன்வைத்திருந்தால் பின்வந்த பிரச்சினைகள் எழுந்திரா.1983கலவரத்தின் பின்னர் இந்தியா சென்ற இவர்,அங்கு அன்றைய பிரதமரான இந்திரா காந்தியைத் தமது புலமையால் கவர்ந்ததால் எமது பிரச்சினையில் இந்தியாவை அக்கறை கொள்ள வைத்தது.

இந்திய-இலங்கை அரசுகளின் செயற்பாடே 1987ஆம் ஆண்டைய இலங்கை இந்திய ஒப்பந்தமாகும்.இதன் செயலாக்கமும் முறைப்படி நடந்திருந்தால் பின்வந்த பிரச்சினைகள் பலவும் தகர்க்கப்பட்டிருக்கலாம்.தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முதற்படி என்றே இதனைக் கூறலாம் ஒழிய இது எமது பிரச்சினையைத் தீர்த்து விட்டது என்று சொல்லமுடியாது.

இலங்கைத் தமிழரின் பிரச்சினையை இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் எடுத்துரைத்த பெருமைக்குரியவர் தலைவர் அமிர்தலிங்கம்.அவரது புலமை, வாதத்திறமை,நேர்மையான ஆனால்,தூய்மையான வாழ்க்கை பலரையும் கவர்ந்தது. பத்திரிகைகளுக்குச் செவ்வி அளிப்பதில்,விடயங்களை கணனியிலிருந்து வெளிக்கொணர்வது போல் அபார ஞாபகசக்தியுடன் சொல்லும் திறமை இவருக்கே உண்டு.இவர் இறக்க முன்னர் இவரைச் செவ்வி கண்டமாலினி பார்த்தசாரதி அவர்கள் சுமார் இரண்டு மணித்தியாலம் தாம் அவரைப் பேட்டி கண்டதாகவும் இப்பேட்டியில் ஒரு சொல்லுக்கு இன்னொரு ஆங்கிலச் சொல்லை மாற்றமுடியாதவாறு ஆற்றெழுக்குப் போன்று அச் செவ்வி அமைந்தது என இந்தியா ருடேடு என்ற ஆங்கில ஏடில் வியந்துள்ளார்.

தலைவர் அமிர்தலிங்கத்தின் வாழ்வு தமிழரது வாழ்வோடு இணைந்தது.தனக்கென வாழாது தாம் சார்ந்த இனத்திற்காகவே தம்மை அர்ப்பணித்தவர்.தியாகம் என்ற பதத்திற்கே இலக்கணமாக வாழ்ந்தவர்.கொண்ட கொள்கைக்கான அர்ப்பணிப்பே இவரது தாரக மந்திரம்.இன்றைய அரசியல்வாதிகளுக்குரிய பல வசதிகளும், வாய்ப்புகளும் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கவில்லை என்றாலும் கூட ஒரு தூய்மையான,நாணயமான மனிதராக எல்லோராலும் போற்றப்பட்டவர்.

இன்று அவர் மறைவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் எம்மவரால் அவரைப்போல் காத்திரமாக உரை நிகழ்த்துபவர் இல்லை.அவரது அரசியல்முதிர்ச்சியும், பலருடன் உள்ளூரிலும் சர்வதேசத்திலும் அவருக்கிருந்த தொடர்பும் ஆளுமையும் எமது இனத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்றிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தந்தைசெல்வா காலத்தில் தவறவிடப்பட்ட அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை தலைவர் அமிர்தலிங்கம் காலத்தில் தக்கவாறு பயன்படுத்தி, தலைவரின் முதிர்ச்சியான,தெளிவான அரசியல் அறிவையும் நமது சமுதாயம் பெற்று அதனைத் தக்கவாறு பயன்படுத்த நமது இனம் கொடுத்துவைக்கவில்லை.

பேராசிரியர்.சி.க. சிற்றம்பலம்
சிரேஷ்ட் துணைத்தலைவர்,
இலங்கை தமிழரசுக் கட்சி

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply