பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவை இல்லை: ஜேவிபி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்கவேண்டும் என்று இலங்கையில் எதிரணியில் இருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி- ஜேவிபி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு இரண்டு வாரங்களே கடந்த நிலையில், கடந்தவியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனிமேலும் அவசரகால சட்டத்திற்கான தேவை நாட்டில் இல்லை என்று அறிவித்தார்.
சாதாரண சட்டங்களே நாட்டின் நிர்வாகத்துக்குப் போதுமானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜனநாயகத்தை நிலைநிறுத்தக் கூடிய, பயங்கரவாத அச்சமற்ற சூழல் நாட்டில் இருப்பதாகவும் திருப்தி தெரிவித்தார்.
அப்படியானால், கடந்த 9ம் திகதி அவசரகால நிலையை நீடிப்பதற்காக பிரதமர் நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்ட போது அவர் முன்வைத்த காரணங்கள் பொய்யானவையா என்று ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்கத்துக்கு உண்மையாகவே ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கமிருந்தால் அவசரகால சட்டத்தை விட மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பாக இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்கவேண்டும், சட்டத்தின் ஆட்சியை சரியாக அமுல்படுத்த வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பொன்றில் ஜேவிபி எம்.பி. அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்துக்கு தேவையானால் எந்த நேரத்திலும் அவசரகால சட்டத்தின் கீழ் கைதானவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடிய நிலைமை இருப்பதாகவும் ஜேவிபி எம்.பி தெரிவித்தார்.
கடந்த மே 18ம் திகதி இலங்கையின் வெளியறவு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இந்தியா சென்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இதுபற்றி கூறப்பட்டிருப்பது, எதிர்வரும் செப்டம்பரில் ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளமை, நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் போன்றனவே ஜனாதிபதியின் அறிவிப்புக்கு காரணம் என்றும் அனுரகுமார கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply