டில்லி மாநாட்டில் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடையே முரண்பாடு: தினக்குரலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான அறிக்கையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை உள்ளடக்குவதில் தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படாததால் அரசியல் தீர்வு விடயத்தை அடுத்த சந்திப்பிற்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் – ரெலோ – தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தினக்குரல் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

புதுடில்லியில் அண்மையில் உலகளாவிய அபிவிருத்திக்கான மனித உரிமைகள் பாராளுமன்ற அரங்குடன் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் நடத்திய சந்திப்பின் போது தேசியம், சுயநிர்ணயம் என்ற இரண்டு விடயங்களும் அரசியல் தீர்வுக்காக உள்ளடக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருந்ததுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டபோது அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.அது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

முதல் நாள் அவசர பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு முக்கிய கோரிக்கைகள் இந்திய பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் முன்வைக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற நீண்ட விவாதம் காரணமாக அன்றைய தினம் அரசியல் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. எனவே மறுநாள் அரசியல் பிரச்சினை குறித்து ஆராய்வதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதனைத் தயாரித்தார்கள். இதில் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை குறித்து ஆராய்ப்பட்ட போது தற்போதுள்ள சூழ்நிலையில் சுயநிர்ணய உரிமை பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிட்டால் அது தேவையற்ற குழப்பங்களுக்கே வழிவகுக்கும். ஆகவே தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் பிரச்சினைகளை இதன் மூலம் அதிகரிக்கச் செய்யக்கூடாது. ஆகவே அதனைத் தவிர்க்க வேண்டும் என்று ஆனந்தசங்கரி குறிப்பிட்டுக் கூறினார்.

அதனை ஈ.பி.ஆர்.எல்.எவ். வரதன் அணியினரும் புளொட் அமைப்பினரும் ஈ.என்.டி.எப்.எல்.ராஜனும் ஆதரித்தனர். எஸ்.கஜேந்திரன் இதற்கு உடன்படவில்லை. இரு தரப்பினரும் கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததனால் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்குவதா இல்லையா என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
ஆயினும் தேசியம் என்ற விடயத்தை உள்ளடக்கியதாக தீர்வு யோசனை அமைந்திருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இதில் எந்தவிதமான முரண்பாடும் இருக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலையிட்டு இங்கு தயாரிக்கப்படுகின்ற அறிக்கைகளில் அனைவரும் கையெடுத்திட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துக் கூறியது. ஆகவே தமிழ்த் தேசியம் என்ற பதத்தினுள் அனைத்து விடயங்களும் அடங்கியிருக்கத்தக்கதாக அங்கு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அதனை புதுடில்லிக்குச் சென்றிருந்த அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருப்பதனால் சுயநிர்ணய உரிமையைத் தவிர்த்து கையெழுத்திடலாம் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது. ஆயினும் இதற்கும் ஏகமனதான உடன்பாடு ஏற்படவில்லை.
தமிழ்த் தேசியத்துடன் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது கட்சியும் கையெழுத்திடுவோம் என கஜேந்திரன் ஆலோசனை தெரிவித்தார்.

ஆனால், புதுடில்லிக்குச் சென்றிருந்த தமிழ்க் கட்சிகளில் இரண்டு கட்சிகள் மாத்திரம் அவ்வாறு கையெழுத்து இடுவது, வந்த இடத்தில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் அவற்றுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டிருந்தது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்துவிடும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.

இந்த நிலையில் மேலும் முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டிருக்காமல் அரசியல் தீர்வு விடயத்தை அடுத்த சந்திப்பிற்கு ஒத்திவைக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை தெரிவித்தது. இந்த ஆலோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கு நிலவிய முரண்பாட்டு நிலைமைக்கு ஒரு முடிவேற்பட்டது.

இதேவேளை முதல்நாள் அவசர தேவைகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பல முக்கிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை அனைவரும் எந்தவிதமான முரண்பாடுகளுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அதில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் பல்வேறு பிரச்சிகனைகளுக்குக் காரணமாக இருக்கும் இராணுவத்தினரை அந்தப் பிரதேசங்களில் இருந்து மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கை முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருந்தது.
இடம்பெயர்ந்த மக்களில் இரண்டு இலட்சம் பேர் இன்னும் இந்தியாவில் இருக்கின்றார்கள். இதனைவிட உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களில் இரண்டு இலட்சம் பேர் இன்னும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவில்லை. மக்கள் இடம்பெயர்ந்துள்ள பல இடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அனுமதியை இராணுவம் இன்னும் வழங்கவில்லை.
இவ்வாறு மக்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயம் பொதுமக்கள் உட்பிரவேசிப்பதற்குக் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற பெயரில் காணிகளை எடுத்து இராணுவ முகாம்களை அமைப்பதற்கே ஆகும்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் சீனத் தயாரிப்பான உடனடியாகப் பயன்படுத்தத்தக்க நிர்மாணப் பொருட்களைக் கொண்டு குடியிருப்பதற்கான வீடுகள், விடுதிகள் என்பன ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன. மெனிக்பாம் இடைத் தங்கல் முகாமில் இருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுப்பப்பட்ட பல குடும்பங்கள் பல இடங்களில் தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கின்றன.

மீள்குடியேற்றப் பகுதிகளின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வீடமைப்பு போன்ற பல விடயங்களில் இராணுவத் தலையீடு அதிகமாக இருக்கின்றது. சிவில் நிர்வாக நடவடிகைகளில் தலையிடுகின்ற இராணுவ அதிகாரிகள் உத்தரவுகளை ஏற்றுச் செயற்பட வேண்டியவர்களாக சிவில் அதிகாரிகள் இருக்கின்றார்கள். எண்ணற்ற குடும்பங்கள் வீடுகளின்றி இன்னும் கூடாரங்கள் கொட்டில்களிலேயே இருக்கின்றன. காணி விடயங்களிலும் இராணுவத் தலையீடு இருக்கின்றது. ஆகவே, உடனடியாக அவசர நடவடிக்கையாகப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோருக்கின்றோம். உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
உடனடியாக இராணுவத்தினர் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இருந்து மீளப்பெறப்பட வேண்டும். நிலங்களை அபகரிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தாமதமின்றி அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இடம்பெயர்ந்து வந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மக்கள் உடனடியாகச் சொந்த நாட்டிற்குத் திரும்பி தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறி வசிப்பதற்குரிய சாதகமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply