அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்: நீதியமைச்சரிடம் மன்னார் ஆயர் கோரிக்கை
விசாரணைக்கு உட்படுத்தப்படும் உரிய விசாரணைகள் இன்றியும் பல்வேறு காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை நிரபராதிகள் எனக் காணும் பட்சத்தில் விரைவில் விடுதலை செய்வதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு மன்னார் மற்றும் வவுனியா மறை மாவட்டங்களுக்கான ஆயர் பேரருள் இராயப்பு ஜோசப் ஆண்டகை, நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கொழும்பில் அவரது அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
இத்தகைய சந்தேக நபர்கள் பலர் மீது சில வருடகாலகமாகவே கரிசனை செலுத்தப்படாதிருப்பது பற்றியும் அவர் முறையிட்டார்.
இத்தகைய சிறைக் கைதிகளில் பலர் சம்பந்தப்பட்ட புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மேற்கொண்டு கையாள வேண்டிய நடவடிக்கைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்டாதிருப்பதாகவும் ஆயர் கவலை வெளியிட்டார்.
அண்மையில் தாம் வவுனியா சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்து நீதியமைச்சரையும் சட்டமா அதிபரையும் சந்தித்து இது தொடர்பாகப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே இந்தச் சந்திப்பை மேற்கொண்டதாக ஆயர் கூறினார்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.
கிளிநொச்சியிலும் வன்னியில் முல்லைத்தீவு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் யுத்த காலத்திலும் இறுதி யுத்த காலத்திலும் கைது செய்யப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் பற்றியும் அவர் அமைச்சரிடம் பிரஸ்தாபித்தார். இச்சந்திப்பின்போது ஆயர் சில ஆவணங்களையும் கைதானோர் பலரின் பெயர்ப்பட்டியலையும் நீதியமைச்சரிடம் கையளித்தார்.
நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் மத்திய மலைநாட்டிலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் பெரிதும் காணப்பட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், குறிப்பாக இள வயதுப் பெண்களே அந்த அச்சுறுத்தலினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தவற்றை செவிமடுத்த நீதியமைச்சர் ஹக்கீம், இக் கைதிகள் விவகாரம் குறித்து தாம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் பலர் தொடர்பான கோவைகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் இது போன்ற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சுடனும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் சிறைச்சாலைகள் அமைச்சுடனும் தொடர்புபட்டிருப்பதால் தாமாக தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருவதாகவும் எனினும் ஆயர் முன்வைத்த வேண்டுகோள்கள் பற்றி தாம் உரிய தரப்பினருடன் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply