கிறீஸ் மனிதர் விவகாரத்தில் தமிழ் மக்கள் மீது அடாவடித்தனம் ஜனாதிபதியைத் தலையிடுமாறு கோருகிறது தமிழ்க் கூட்டமைப்பு
’கிறீஸ் மனிதர்கள்’ விவகாரத்தில் அப்பாவித் தமிழ் மக்களின் வீடுகளுக்குள் படையினர் புகுந்து அவர்களை கொடூரமாகத் தாக்குவதானது தமிழர்களைப் பழிவாங்கும் அடாவடித்தனம் இன்னமும் அடங்கவில்லையென்பது தெளிவாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்;
ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் மனிதனின் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில் தமிழ்பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாக பெண்களின் மீதே கிறீஸ் மனிதன் அல்லது மர்ம மனிதன் என்ற இரத்தக் காட்டேரி அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
கிறீஸ் மனிதனின் பயங்கரம் நிகழ்ந்தேறியுள்ள எல்லாப் பகுதிகளிலுமே மக்கள் ஒன்றுதிரண்டு கிறீஸ் மனிதர்கள் சிலரைப் பிடித்திருக்கின்றனர். காவல்துறையிடமும் இராணுவத்திடமும் கையளித்துமுள்ளனர். ஆனால், இவை எல்லாம் கட்டுக்கதைகள் என்றும் வெறும் வதந்திகள் என்றும் நகைப்புக்கிடமாகக் காவல்துறையும் இராணுவமும் மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறது.
பாதுகாப்புச் செயலாளர் இதில் 25 விழுக்காடு உண்மை மீதி 75 விழுக்காடு வதந்தி என இஸ்லாமியப் பெரியார்களிடம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 25 விழுக்காடு உண்மை என்ன? என்பது பற்றி இதுவரை மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.
பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளிகளாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். எங்கெங்கு கிறீஸ் மனிதனுக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆபத்தாந்தவன் போல் இராணுவத்தினர் உடனடியாகவே பிரசன்னமாகி கிறீஸ் மனிதனைக் காப்பாற்றி விடுகின்றார்கள். ஆனால் இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். கிழக்கில் இருந்து வடக்கு வரை மக்களை கிலி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இருண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிறீஸ் மனிதப் பயங்கரம் ஆங்காங்கே நிகழும் தற்செயலான செயல்களல்ல. இது நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சிநிரலாகும். இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களைக் கோபம் கொள்ளச் செய்து, அவர்களை வீதிக்கு இழுத்து அவர்களை அழித்தொழிப்பது தான் இந்தத் திட்டத்தின் பின்னணியோ என்று ஐயங்கொள்ள வேண்டியுள்ளது. இல்லையேல் இவர்களை வீடு வீடாகச் சென்று இழுத்துப்போட்டு தாக்க வேண்டியதேவை எதுவும் இராணுவத்துக்கு இல்லை. இதன் மூலம் இராணுவத்தினர் தமிழரைப் பழிவாங்கும் அடாவடித்தனம் இன்னமும் அடங்கவில்லை என்பது அப்பாவிகள் மீது அவர்கள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களில் இருந்து புலனாகின்றது.
இவ்வாறான பரவலான தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய பலம் யாரிடம் இருக்கின்றது என்பதையும் இங்கு நிலைகொண்டிருப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். கிறீஸ் மனிதனின் நடமாட்டத்துக்கும் படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை. இதைக் கட்டுப்படுத்த இயலாத காவல்துறையும் இராணுவமும் தேவை தானா? என்பதை அவர்களே சிந்திக்க வேண்டும்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரதிபலிப்பு இதுதானா? என்ற கேள்வியும் எழுகின்றது. முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply