கொழும்பில் மனோ கணேசனை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும்

வடகிழக்கு மக்களின் பிரச்சினைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற மனோ கணேசனுக்கு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமென அக்கட்சியின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறுகையில்;

வடக்கு, கிழக்கு, மலையகமெனப் பாராது தமிழ் மக்கள் எங்கெல்லாம் துன்பப்பட்டு, துயரப்படுகிறார்களோ அங்கெல்லாம் அந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பவர் மனோ கணேசன்.
கடந்த காலங்களில் மட்டுமல்லாது தற்போதும் அந்த மக்களின் உரிமைக்காக அவர் போராடி வருகின்றார். தமிழர்களின் விடுதலைக்காகவும் அவர்களது மனித உரிமைகளுக்காகவும் வடகிழக்கிற்கு வெளியே தனித்து நின்று போராடும் அவரை ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.

இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். வடக்குகிழக்கில் நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில் அந்த மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றுபட்டு நிற்பதால் தமிழ் மக்களின் பலம் உலகிற்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

அதேபோல் கொழும்பிலும் தமிழ் மக்கள் ஓரணியில் திரளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்கள் கூறுபட்டு நிற்பதால் அவர்களுக்கு எவ்வித பிரயோசனமுமில்லை. மாறாக அவர்களை பிரித்தாளவே அது வழிவகுக்கும்.

இதனால் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியில் அணிதிரட்டி அவர்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் ஆற்றல் மிக்கவர் மனோ கணேசன். இதனை அனைத்து மக்களும் உணரவேண்டும். இதன் மூலமே வடக்குகிழக்கை போன்று கொழும்பிலும் தமிழ் மக்கள் பலம்பெற்றவர்களாயிருக்க முடியுமெனத் தெரிவித்தார்.

இதேநேரம், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆதரவளிக்கவுள்ளதாக அதன் அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்;

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மனோ கணேசன் தலைமையில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆதரவளிக்கவுள்ளது. இதற்காகவே வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின் மனோ கணேசனும் விக்ரமபாகு கருணாரட்ணவும் வெளியே வந்த போது நான் இருவரையும் வரவேற்று வாழ்த்தினேன்.

வடக்குகிழக்கு மக்களின் ஆதரவு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உள்ளது என்பதை தெரியப்படுத்தவே அங்கு சென்றேன். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மனோ கணேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்ததுடன் வடக்கு வந்து பிரசாரக் கூட்டங்களிலும் பங்கெடுத்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply