’கேக் கிடைக்கவில்லை என்பதற்காக பாணை நிராகரிக்காதீர்கள்’

புதுடில்லியில் இரு நாட்கள் இடம்பெற்ற ‘துயரும் தீர்வும்’ என்னும் கருத்தரங்கு எந்தவொரு தீர்வுக்கும் வர முடியாமல் முடிவடைந்திருக்கிறது. வழமைபோல் தமது சாதனையை நிகழ்த்தி முடித்த மனத்திருப்பதியில் ஈழத்தமிழர் தேசியத் தலைமைகள் வீடு திரும்பியிருக்கின்றனர். ‘ஒடுக்கப்பட்டவர்களே முதலில் உங்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையை குழி தோண்டிப் புதையுங்கள்’ – இதெல்லாம் ஒருபோதுமே நமது அரசியல் தலைமைகளின் காதில் ஏறப் போவதில்லை. ஏன் இந்த நிலைமையென்று கேட்டால் அதற்குரிய பதில் இந்தப் பத்தியாளரிடம் இல்லை. தவிர இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியளவிற்கு இந்தப் பத்தியாளர் புத்திசாலியுமல்ல. ஆனால் நமது அரசியல் தேடல் விருப்பிற்கும் நிர்ப்பந்தத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்ற புரிதல் இந்தப் பத்தியாளருக்குண்டு.

ஈழத் தமிழ் மக்களுக்குரிய யதார்த்தமான அரசியல் தீர்வென்று எதைச் சொல்வீர்கள்? – இப்படியொரு கேள்வியை குளோபல் தமிழ் செய்தியின் ஆசிரியரும் நண்பருமான நடராஜா குருபரன் என்னிடம் கேட்டார். சமீபத்தில் வெளிவந்த எனது ‘காலத்துயரும் காலத்தின் சாட்சியமும்’ என்னும் நூல் குறித்த கலந்துரையாடலின் போதே இது குறித்து பேசவேண்டி ஏற்பட்டது. நான் இதன்போது முன்னர் எனது பத்தியில் எடுத்தாண்டிருந்த டட்லி சேனநாயக்கவின் கருத்தொன்றையே பயன்படுத்தியிருந்தேன். ‘கேக் கிடைக்கவில்லை என்பதற்காக பாணை நிராகரிக்காதீர்கள்’ – 1946 ஆம் ஆண்டு இடம்பெற்ற சோல்பரி அரசியல் யாப்பின் மீதான விவாதத்தின்போதே சேனநாயக்க இந்தக் கருத்தை பிரயோகித்திருந்தார்.

வரக்கூடிதென்று நம்பும் ஒன்றுக்காக எடுக்கக் கூடிய அனைத்தையும் நிராகரிப்பதாகத்தான் நமது இதுவரை கால அரசியல் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. இதில் அரசு பாணும் இல்லை கேக்கும் இல்லை என்று சொல்லும் போது என்ன செய்வது என்ற கேள்வியையும் நாம் நிராகரிக்க முடியாது. இதன்போதுதான் நாம் இந்தியாவின் அனுசரணை குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இலங்கையின் கடந்தகாலத்தை எடுத்து நோக்கினால், புற அழுத்தங்களின் காரணமாகத்தான் அரசு தனது நிலையிலிருந்து கீழிறங்கிய வரலாறுண்டு. அது 87, ஆக இருக்கலாம் அல்லது நோர்வேயின் மத்தியஸ்த காலமாக இருக்கலாம். கொழும்பில் மாறி மாறி ஆட்சியமைத்த சிங்கள அரசாங்கங்கள், அது ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக இருக்கலாம் அல்லது ஜக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், அவைகள் எவையுமே இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையிருக்கிறது என்பதை உணர்ந்து, அந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக தாங்களாகவே முன்வந்த வரலாறில்லை. இனியும் அத்தகையதொரு வரலாற்றை நாம் காண முடியாது.

இலங்கையின் முன்னணி சிங்கள வரலாற்றியலாளர் பேராசிரியர் கே.எம்.டி சில்வா, ஆட்சியாளர்கள் இனத்துவ முரண்பாட்டை தீர்க்க முயலவில்லை. மாறாக அதனை முகாமை செய்து வருகின்றனர் (ethnic conflict cannot be solved, only managed) என்று குறிப்பிடுவதானது நூறுவிகித உண்மை. இப்போதைய மகிந்த அரசாங்கமும் பிரச்சனையை முகாமை செய்ய விளைகின்றதேயன்றி அதற்கான தீர்வைக் காண முயலவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் மனம்கொண்டால் நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பது கடினமான விடயமல்ல. இப்போது இருக்கும் பலம்பொருந்திய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அனுமதிப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அரசோ தொடர்ந்தும் அடிப்படைவாதிகளின் பிடியிலேயே இருக்க விரும்புகிறது.

இந்த நிலையில்தான் கொழும்பால் எந்தவகையிலும் தவிர்த்துச் செல்ல முடியாத புவிசார் நிர்ப்பந்தமான இந்தியாவின் அனுசரணையுடன் ஒரு அரசியல் தீர்வைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இது இப்போது இருக்கின்ற, இனி வரப்போகின்ற எந்தவொரு ஈழத் தமிழ்த் தலைமையாலும் நிராகரித்துச் செல்ல முடியாத நிர்ப்பந்தமாகும்.

சில தினங்களுக்கு முன்னர் பேசிய இரா.சம்பந்தன் இந்தியாவின் உதவியில்லாமல் கொழும்பு யுத்தத்தில் வெற்றிபெற்றிருக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் முதல்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகள் இந்தியாவின் உதவியுடனேயே அழிக்கப்பட்டனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியாவே தமிழ் மக்களின் பிரச்சனையை நியாய பூர்வமாகத் தீர்த்துவைப்பதற்காகவும் உதவ வேண்டும்; என்பதுதான் இங்கு சம்பந்தன் மறைமுகமாக முன்வைக்க முயலும் செய்தி. ஆனால் இங்கு நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயம் – அது என்ன வகையானதொரு தீர்வு? நாம் முன்வைக்கும் தீர்வாலோசனை இன்றைய சூழலில் எந்தளவிற்குச் சாத்தியமானது?

நடந்து முடிந்த புதுடில்லி மாநாட்டில், நமது அரசியல் தலைமைகள் கருத்தொருமிக்கத் தடையாக இருந்ததாகச் சொல்லப்படுவது சுயநிர்ணய உரிமை பற்றிய விடயமாகும். இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்காகக் கோரப்பட்ட முன்மொழிவு ஒன்று எவ்வாறு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இருக்க முடியும்? இந்தியா தனது நாட்டுக்குள் அங்கிகரிக்காத ஒன்றை ஈழத் தமிழ் மக்களுக்காக பெற்றுக் கொடுக்க முன்வருமா? இதனை விளங்கிக்கொள்ளப் பெரிதாக அரசியல் படிக்க வேண்டுமென்னும் அவசியமில்லை. சிறு பையன்கள் கூட விளங்கிக்கொள்ளக் கூடிய இந்த உண்மையை நமது மெத்தப்படித்த தமிழ்த் தேசியத் தலைமைகளால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது.

அப்படியானால் ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் இல்லையா என்ற கேள்வியை ஒருவர் எழுப்பக் கூடும். இங்கு பிரச்சனை தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்பதை நாம் ஏற்றுக் கொள்வோமாயின் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைவர்களே. இதில் மாறுபட ஏதும் இல்லை. ஆனால் அதனை முதன்மைப்படுத்தி ஓர் அரசியல் தீர்வை அடையக் கூடிய நிலையில் நாம் இப்போது இருக்கின்றோமா என்பதுதான் விடயம்.

அரசியல் என்பது சாத்தியப்பாடுகளை கையாளும் கலை – இன்றைய சூழலில் எதனைக் கையாள முடியுமோ அதனை மட்டுமே நம்மால் கையாள முடியும். எனவே இன்றைய சூழலில் அதிலும் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் பெறக்கூடிய தீர்வொன்று இருக்கின்றதென்றால், அந்த ஆகக் கூடிய அரசியல் தீர்வு 13வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை மட்டும்தான். இதில் மாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரத்தை கொழும்பு ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளாது. எனவே காணி அதிகாரமுள்ள ஒரு மாகாணசபை முறைமைக்கான அனுசரணையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் எதிர்பார்க்கலாம். கொழும்பை பகைத்துக் கொண்டு இந்தியா எங்களுக்காக செயற்படுவதிலுள்ள சிக்கல்கள் குறித்து முன்னைய பத்தியில் பார்த்திருக்கிறோம்.

எனவே இன்றைய சூழலில், ஈழத் தமிழ் மக்களுக்கான யதார்த்தமான அரசியல் தீர்வு என்ன என்று கேட்பீர்களானால் – அது காணி அதிகாரம் உள்ள மாகாணசபை முறைமையின் கீழான ஒரு தீர்வு என்பதுதான் இந்தப் பத்தியின் பதிலாகும். ஆனால் காணி அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வொன்றை கொழும்பு விரும்பித் தரப் போவதில்லை. அரசு புற அழுத்தங்களுக்கு பணிந்தே இதனைச் செய்ய முயலலாம். இதற்கான அழுத்தங்களை எவ்வாறு கொண்டுவருவது என்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டுமேயன்றி வெறும் சொற்களைக் காவிக் கொண்டு திரிவதையல்ல.

இங்கு பிறிதொரு விடயத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். விடுதலைப்புலிகள் கடந்த முப்பது வருடங்களாக முப்படைகளையும் பேணி கொழும்பை அடிபணியச் செய்யும் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தக் காலத்தில் கொழும்மை நிலைகுலையச் செய்யும் பல்வேறு இராணுவத் தாக்குதல்களை வெற்றிகரமாக புலிகள் மேற்கொண்டிருக்கின்றனர். மகிந்த அரசிற்கு முன்பிருந்த பல அரசாங்கங்கள் புலிகளின் இராணுவத் தாக்குதல்களால் நிலைகுலைந்து தடுமாறியிருக்கின்றன.

இப்படியான சந்தர்ப்பங்களில் கூட ஒரு வார்த்தைக்குத்தானும் எந்தவொரு சிங்களத் தலைமையும் தமிழ் மக்களுக்கான ‘சுயநிர்ணய’ உரிமையை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னதில்லை. தமிழர்களின் அரசியல் புலிகளின் கையில் இருந்தபோதே ஏற்றுக் கொள்ளாத ஒரு விடயத்தை த.தே.கூட்டமைப்பும் ஏனைய அரசியல் தலைமைகளும் வெறும் காகித அறிக்கைகளைக் கொண்டு பெற்றுவிடலாம் என்பது, கோடாம்பக்க தமிழ் சினிமாவின் நகைச்சுவைக் காட்சிக்கு வேண்டுமானால் ஒருவேளை பயன்படலாம். நாம் எத்தகையதொரு நிலையில் இருக்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டால்தான் நமது அடுத்த கட்டம் என்னவாக இருக்க முடியும் என்பதை தீர்மானிக்க முடியும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி ஏனைய கட்சிகளும் சரி முதலில் இந்த உண்மையை விளங்கிக்கொள்ள முயல வேண்டும். விருப்பங்களுக்காக அரசியல் பண்ணுவதை விடுத்து மக்களின் வாழ்வியல் நிர்ப்பந்தத்திற்காக அரசியலை கையாளுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதே இப்பத்தியின் வாதமாகும்.

: யதீந்திரா

http://ponguthamil.com

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply