யாருக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு? மக்களுக்கா! மர்ம மனிதர்களுக்கா!

வீட்டில் இருப்பவர்களை மர்ம மனிதர்கள் தாக்கிக் காயப்படுத்தும் போது அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யாதீர்கள் என்று இராணுவத்தினர் கூறுவது சமாதான சூழலில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். குடாநாட்டு மக்களிடையே அண்மைக் காலமாக நிலவி வருகின்ற பீதி மற்றும் பதற்றநிலை தொடர் பில் ஆராய்ந்து அதற்கான தீர்வு காணும் வகையில் நேற்று யாழ். மாவட்ட கேட்போர் கூடத்தில் உயர்மட்ட மாநாடு ஒன்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போதே மக்களினால் மேற்படி குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பொது மக்கள் சார்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாவாந்துறைப் பகுதியில் மக்கள் மீது இராணுவத்தினராலும் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்பகுதியில் நடமாடுவதை அறிந்த மக்கள் அவர்களை துரத்திச் சென்றனர். ஆனால், மர்ம நபர்கள் இராணுவ முகாமிற்குள் சென்று மறைந்த தையடுத்து அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என இராணுவத்தினருடன் பொதுமக்கள் முரண்பட்டனர்.

ஆனால் அவர்களை ஒப்படைக்க இராணுவத்தினர் மறுத்ததையடுத்து அங்குகூடிய மக்கள் சில நிமிடங்களில் அந்த இடத்தை விட்டு தமது வீடுகளுக்கு சென்று விட்டனர். பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து பல மணி நேரத்திற்கு பின்பு வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் மக்களைக் கதறக் கதற அடித்துக் காயப்படுத்தினர். அந்த தாக்குதல் சம்பவத்தில் நாவாந்துறையில் காயப்படுத்தப்படாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. காயமடைந்தவர்கள் வைத்திய சாலைக்கு சென்றுவருவதற்கு கூட பயப்பட்டனர் என நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொது மக்கள் சார்பில் விபரிக்கப்பட்டது. இது தொடர்பில் தெரிவித்த மற்றொருவர்; இராணுவத்தினரும் பொலிஸாரும் மக்களை நேசிப்பவர்கள் என்றால் எவ்வித நிபந்தனையும் இன்றி எங்கள் பகுதிகளில் கைது செய்த பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும்.

இதந்தக் கலவரம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என இராணுவத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுவொன்றும் திட்டமிடப்பட்டதல்ல. மக்கள் மர்ம மனிதன் என சந்தேகிக்கப்பட்ட நபர்களைத் துரத்திச் செல்லும்போது இராணுவத்தினர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஏற்பட்டதே என அவரால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் யாழ். குடாநாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட சமாதானம் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டது. அதில் மக்கள் சந்தேகம் கொள்ளும் வகையில் இராணுவத்தினர் நடந்து கொள்ளக் கூடாது எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

கிறீஸ் மனிதனை மக்கள் துரத்தி வரும்போது உடனடியாக அந்த இடத்திற்கு இராணுவத்தினர் வந்து அவர்களை மக்களிடமிருந்து காப்பாற்றுவதோடு மக்களை அடித்து காயப் படுத்துகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவத்தினர் உள்ளனரா அல்லது கிறீஸ் மனிதனுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவத்தினர் உள்ளனரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த கிறீஸ் மனிதன் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதாகவும் அதற்கு இராணுவத்தினர் துணை போவதாகவும் மக்கள் அச்சப்படுகின்றனர். 6 மணிக்கு முன்பு வீடுகளிற்கு சென்று விட வேண்டும் என இராணுவத்தினர் மக்களிடம் பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.

இவ்வாறு இராணுவத்தினர் மக்களிடம் கூறுவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது என மாநா ட்டில் கலந்து கொண்டவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை இந்த மாநாட்டில் மத குருமார்கள் தமது கருத்துக்களை கூறும்போது நாட்டில் ஏற்பட்ட சமாதானம் நிலைத்து இருக்க வேண்டும். மக்கள் நீண்ட காலத்திற்கு பின்புதான் நிம்மதியாக வாழும்சூழல் ஏற்பட்டது எனவும் கூறினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply