தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே நான் ஜெனீவாவுக்கு செல்கிறேன்
ஐ. நாவினுடைய கூட்டத் தொடரில் அபிவிருத்திக்கும் மீள்குடியமர்வுக்குமான செயலமர்வில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளவே நான் ஜெனீவாவிற்குச் செல்லவுள்ளேன். யுத்தக் குற்றச் சாட்டுகளுக்கு எதிராக சாட்சி சொல்லுமாறு அரசாங்கம் என்னை ஒருபோதும் வற்புறுத்தவுமில்லை வேண்டுகோள் விடுக்கவுமில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். உலக உணவுத் திட்டம் தொடர்பாக மணிலாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய யாழ். அரச அதிபர் நேற்று இரவு ஜெனீவா புறப்படுவதற்கு முன்பாக தினகரனுக்கு வழங்கிய விசேட பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘மீள்குடியேற்றமும், அபிவிருத்தியும்’ என்ற தலைப்பில் ஜெனீவாவின் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அரச அதிபருடன் எஸ். தவாரட்ணம் புறப்பட்டுச் சென்றார். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்ததாவது :-
கடந்த 30 வருட கால யுத்தத்தில் எமது பகுதித் தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளைச் சந்தித்துள்ளனர். எனது 30 வருட கால அரச சேவையில் 29 வருடங்களை வன்னி மக்களுடனேயே சேவை செய்து கழித்துள்ளேன். இந்த மக்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கறிவேன்.
நான் சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு இந்த மக்கள் பட்ட துன்ப துயரங்களை ஒரு அவதானிப்பாளராகப் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. இந்த மக்கள் பட்ட துன்ப துயரங்கள் இனியும் தொடரக்கூடாது. இப் பிரதேசம் அபிவிருத்தியடைந்து மக்களுடைய துயரங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் ஜெனீவா செல்கிறேன்.
எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் அபிவிருத்திக்கும் மீள்குடியமர்வுக்குமான செயலமர்வில் கலந்துகொண்டு இப்பகுதி மக்களின் தேவைகளை எடுத்துக் கூறி அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கவுள்ளேன்.
மேலும் கண்ணிவெடி அகற்றல், மீள்குடியமர்வு போன்ற இப்பகுதி மக்களின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கவுள்ளேன். இதற்கான அறிக்கைகளையும் தயாரித்துள்ளேன்.
சிலர் நான் இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதைத் தவறான முறையில் விமர்சிக்கின்றனர். ஆனால் கடந்த 30 வருடங்களாக எமது மக்கள் பட்ட துயரங்கள் இனியும் தொடரக் கூடாது என்பதற்காக ஒரு தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே நான் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்.
எமது பகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் இக்கூட்டத் தொடரில் பங்கேற்பவர்களுடன் கருத்துப் பகிர்வுகளில் ஈடுபடவே நான் செல்கிறேன் என்றார். எரிகின்ற வீட்டில் நெருப்பு வாங்குபவர் நான் இல்லை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். சில ஊடகங்கள் நான் மனச்சாட்சியற்ற ஒரு பெண் எனச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மக்களுக்கு அரசாங்க அதிபராக நான் செய்ய வேண்டிய கடமையின் நிமித்தமே நான் ஜெனீவா செல்கிறேன் என்றார்.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செயற்படுத்திய ஒரு அரசாங்க அதிபராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தற்பொழுது கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தினையும் தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களின் மீள்குடியேற்றம் அபிவிருத்தி தொடர்பாக உலகிற்கு எடுத்துக் கூறி மக்கள் குறைகளைப் போக்குவேன் என்றும் உறுதியளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply