தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுக்க இலங்கை எதிர்ப்பு
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தேவைக்கு ஏற்புடைய வகையில் உத்தியோகபூர்வ ஆவணம் அல்ல என்பதனால் அதனை அங்கு விவாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூறுவதற்காக உத்தி யோகபற்றற்ற முறையில் நியமித்த குழுவினால் தயாரிக்கப்பட்டதே இந்த தருஸ்மன் அறிக்கை என்று சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர் பீரிஸ், ஏதாவது ஒரு காரணத்துக்காக அந்தப் பேரவையில் தருஸ்மன் அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளையும் இந்த செயற்பாடு பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தருஸ்மன் அறிக்கையின் தற்போதைய நிலைப்பாடு பற்றி விளக்கமளித்த அமைச்சர் பீரிஸ், தானும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இதுபற்றிய சட்டபூர்வமான நிலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவியான உருகுவேயைச் சேர்ந்த லோரா டியூபி லசரியிடம் எடுத்துரைத்திருக்கிறோம் என்று கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட 29 நாடுகளின் பிரதிநிதிகளையும் அமைச்சர்கள் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையின் பிரதியொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவி நவநீதம் பிள்ளைக்கு அனுப்புவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தீர்மானித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சிலர் கூறினர் என்று குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தானும், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கடுமையாக வலியுறுத்திக் கூறியதாகவும் கூறினார்.
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தனிப்பட்ட ரீதியில் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்கால ஐ.நா. செயற்பாடுகளையும், அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து தானும், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, மைத்திரிபால சிறிசேன, அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமாரா குணநாயகம் உள்ளிட்ட குழுவினர் 10ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை மற்றும் நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திலும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதற்கு எதிராகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply