Thursday, September 15th, 2011 at 5:57
வடபகுதியில் தமிழ் பேசும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவது அவசியமானது. இதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். நீண்டகால யுத்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வருவதைக் காணக்கூடியதாகவிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் இலங்கையை விட்டு சென்றபோது காணப்பட்ட நிலைமையைவிட தற்போது நாட்டின் நிலைமை மிகவும் முன்னேற்றகரமாக மாறியுள்ளது. இடம்பெயர்ந்த வர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள் ளனர். இதுபோன்ற பல்வேறு முன்னேற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன என்று நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பிளேக் கூறினார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக், நேற்று காலை ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை கொழும்பில் நடத்தினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப் பதானது வரவேற்கத்தக்கது. இப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்ந்து செல்வதற்கு இரண்டு தரப்பினரும் தயாராகவே உள்ளனர்.
அதேநேரம், வடபகுதியில் தமிழ் பேசும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவது அவசியமானது. இதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். எனது அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரைத் தவிர எந்தவொரு தரப்பினரும் ஆயுதங்களை வைத்திருக்க வில்லை.
கிறீஸ் பேய் போன்ற குற்றச் செயல்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுப்பது அவசியமானது. குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிபாரிசுகளை முன்வைக்கும் என அமெரிக்கா நம்புகிறது என அவர் தெரிவித்தார்.
மக்களின் வாழ்வை மீளக்கட்டியெ ழுப்புவதற்கும் வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கும் துணைபுரியும் வகையில் அமெரிக்கா அதன் உதவித் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தனியார் துறையினருடன் இணைந்து 202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்யவுள்ளோமெனவும் அவர் கூறினார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிளேக், தற்பொழுது ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாடானது, இலங்கைப் பிரதிநிதிகளுக்கு மிகவும் முக்கியமானது என்றார். யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் விளக்குவதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றார்.
13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதானது சிறந்த ஆரம்பமாகவிருக்கும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் அதிகாரப் பகிர்வுகுறித்து ஆராயவேண்டு மென்றும் ரொபேர்ட்.ஓ.பிளேக் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு மீண்டும் வருகை தந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக் கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொழும்பில் நான் சந்தித்திருந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு யாழ். இராணுவத் தளபதி, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் நான் சந்தித்திருந்தேன். ஊடக சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்தேன்.
இருந்த போதிலும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உறுதி செய்துகொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னமும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.
இறுதியாக, மனித உரிமைகளையிட்டு நான் கரிசனை கொண்டுள்ளேன். நல்லிணக்க செயற்பாடுகளிலும் வடக்கில் மீளத் திரும்பிச் செல்கின்ற மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதிலும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணப்படவேண்டியது மிகவும் முக்கியமானதொரு பாகமாக விளங்குகின்றது. துணை இராணுவப் படைத்தரப்பினரின் ஆயுதங்களைவதன் அவசியம் தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் :
இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply