மஹிந்த ராஜபக்ஷ ,கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் : அமைச்சர் வீரவங்ச
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொரயா ஒபேட்டின் அறிக்கை வெளிவந்ததும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் நிலைமை ஏற்படும். இதற்கான சதி முயற்சியிலேயே சர்வதேச சமூகம் ஈடுபட்டுள்ளது என்று தேசிய ”சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.
லிபியாவில் இடம்பெற்றதைப் போன்றதொரு நடவடிக்கையை இலங்கையில் மேற்கொள்ளவே சர்வதேச சமூகம் முயற்சிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளின் ஒரு கட்டமாகவே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ. பிளேக்கின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. எனவே லிபியாவைப் போன்று இலங்கையை மாற்றியமைக்கும் சர்வதேச சமூகத்தின் சதி முயற்சியை தோற்கடிக்க தேசிய மட்டத்தில் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய ”சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது இலங்கையில் யுத்தம் நடைபெற்ற இறுதிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கான முறையில் செயற்படவில்லை என்று தருஷ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறேவேற்றுப் பணிப்பாளரான தொரயா ஒபேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ நியமனம்
அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ. மூன் இந்த நியமனத்தை உத்தியோகபூர்வமான முறையிலேயே மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் தருஷ்மன் குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்தபோது இலங்கை மற்றும் எமக்கு ஆதரவான நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டன. அப்போது குறித்த குழுவானது தனக்கு ஆலோசனை வழங்க மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ. மூன் தெரிவித்திருந்தார். ஆனால் தருஷ்மன் குழுவின் அறிக்கையானது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சென்றுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொரயா ஒபேட்டின் இன்னும் மூன்று மாத காலத்தில் தனது விசாரணை அறிக்கையை தயாரிப்பார். அதற்கு உள்நாட்டிலும் ஒரு சிலரிடம உதவிகளை பெற்றுக்கொள்வார்.
அறிக்கையின் இறுதிப்பந்தி தயார்
அந்த அறிக்கையின் இறுதிப் பந்தியில் இடம்பெறும் விடயம் தற்போதே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதாவது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்றும் அதனைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்களினால் எதனையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டதாகவும் இறுதிப் பந்தியில் குறிப்பிடப்படும். அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள் எதனையும் செய்ய முடியாத அப்பாவி நிலையாக இருந்ததாக குறிப்பிடப்படும்.
இந்நிலையில் குறித்த விசாரணை அதிகாரியின் அறிக்கையானது தருஷ்மன் அறிக்கை போலன்றி உத்தியோகபூர்வமானதாக அமையும். இந்நிலையில் தொரயா ஒபேட்டின் அறிக்கை வெளிவந்ததும் அதனை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடருக்கு சமர்ப்பிப்பார்கள். மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அங்கு அந்த அறிக்கை ஆராயப்படும். அதன்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த அறிக்கைக்கு அங்கீகாரத்தை வழங்கும்.
இறுதி அரங்கேற்றம்
அதன் பின்னர் இது தொடர்பான விடயம் சர்வதேச யுத்தக்குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படும். இறுதியில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சியின் இறுதிக்கட்ட அரங்கேற்றமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் நிலைமை ஏற்படும். இதற்கான சதி முயற்சியிலேயே சர்வதேச சமூகம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான முயற்சிகளின் ஒரு கட்டமாகவே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ. பிளேக்கின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply