பின்னர் எவர் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்ற பல்லவியைப் பாடட்டும் : ஜெயலத்
அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கிவிட்டு எவர் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என்ற பல்லவியைப் பாடினால் அது பொருத்தமாக இருக்கும். மாறாக, சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி பலவந்தமாகக் சிங்கள மக்களை குடியேற்றுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதாகவிருந்தால், முதலில் தமிழ் மக்களின் கருத்துகளை அரசு கேட்டறியவேண்டும். அதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். மாறாக சமரசம் பேசிக்கொண்டே சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்க முனைந்தால், பேச்சுகள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் ஜயலத் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் மட்டுமல்ல, சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு எம்முடன் பேச்சுகளை முன்னெடுக்கும் அதேவேளை, சில நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வதானது அரசின் நேர்மையற்றத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும். தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது. அரசு திட்டமிட்டு இன ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வாய்மூலம் பேச்சு நடத்தும் இந்த அரசு தனது கொடிய கைகள் மூலம் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என குற்றம்சுமத்தியுள்ளார்.
வடக்கில் குடிசனப் பரம்பலை செயற்கையாக மாற்றியமைப்பதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இதன் ஓர் அங்கமே முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ள சிங்களக் குடியேற்றமாகும். நாட்டை சிங்கள மயப்படுத்தும் முனைப்புடன் செயற்படும் அரசு, தனது திட்டம் நிறைவடையும்வரை பேச்சு என்ற போர்வையில் சர்வதேசத்தையும், தமிழ்த் தலைமைகளையும் ஏமாற்றிவருகின்றது என்பது தெட்டத்தெளிவு என மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, போர் காரணமாகச் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு மென்மேலும் துன்பங்களைக் கொடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றம்சுமத்தியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை. வீடுகளின்றி அந்த மக்கள் அவல வாழ்க்கையை வாழ்கின்றனர். இவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. இது ஒரு நேர்மையற்ற செயலாகும். தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்ற நோக்குடன் பேச்சுகளை முன்னெடுத்துள்ள அரசு, திட்டமிட்டு சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தி எதனை சாதிக்க முயற்சிக்கின்றது என வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply