உலகின் எந்தவொரு நீதிமன்ற விக்ரணையையும் சந்திக்கத் தயார் : மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா
உலகின் எந்தவொரு நீதிமன்ற விக்ரணையையும் சந்திக்கத் தயார் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். தமக்கும், தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு சவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட இருப்பிடத்திற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நியூயோர்க் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், சவேந்திரா சில்வா நேரடி ஆலோசனைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷின் மனைவியும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சீதாராம் சிவம் என்வரின் மகளும் அமெரிக்க நீதிமன்றில், சவேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கடி நிலைமை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தருணத்தில் இவ்வாறான வழக்குகள் தொடுக்கப்டுவதாக இலங்கை இராஜதந்திரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் முறைப்பாடு செய்ய இலங்கை இராஜதந்திரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இந்த வழக்கின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றில் தெளிவுபடுத்த முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேணல் ரமேஸ், ஓர் பாரிய குற்றவாளி எனவும், பாரிய மனித படுகொலையுடன் தொடர்புடையவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், பௌத்த பிக்குகள், அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ரமேஸ் படுகொலை செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply