அபிவிருத்தி பணிக்கே வடக்கில் இராணுவம்: ஐ.நா. செயலரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு

வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள இராணுவம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தருஸ்மன் ஆலோசனை குழு தனக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளவே நியமிக்கப்பட்டது என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்ட அறிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பான் கீ மூனிடம் இந்தச் சந்திப்பின்போது மீண்டும் நினைவூட்டினார்.

சரியாக ஒரு வருடத்துக்கு முன் அதாவது 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி பான் கீ மூனுக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுகூர்ந்தார்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம், இடம்பெற்றது. ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமேயன்றி வேறு எந்த விசாரணை நடவடிக்கைக்கும் தருஸ்மன் அறிக்கையை எடுத்துக்கொள்ளப் போவதில்லையென கடந்த வருட சந்திப்பின் போது பான் கீ மூன் கூறியிருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தார். வடக்கில் மீள் குடியேற்றம் உள்ளிட்ட இலங்கையின் நிலை தொடர்பாக பான் கீ மூன் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதியிடம் விபரம் கேட்டறிந்தார்.

வடக்கில் மீள் குடியேற்றம் பெருமளவில் முடிவடைந்துள்ளதாக கூறிய ஜனாதிபதி இவ்வருட இறுதிக்குள் மீதமுள்ளவர்களையும் மீள்குடியேற்ற முடியுமென கூறினார்.

வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு புறம்பாக அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயங்கரவாத சட்டத்தை மீண்டும் செயற்படுத்தப் போவதாக வெளியான அறிக்கை தொடர்பாக பான் கீ மூன் கேட்டபோது, அதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி தான் ஒருபோதும் இலங்கைக்குள் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான இந்த சந்திப்பின்போது தற்போதைய நிலை பான் கி மூனுக்கு விளக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து சிறிது நேரம் அளவளாவியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டபோது, அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார். இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கொஹன்ன மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உடனிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply