அரசாங்கம் வீடுகளை உடைக்கும் திட்டம் முற்றாக கைவிடப்படவில்லை: ரணில்
வீடுகளை உடைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தேர்தல் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர முற்றாக கைவிடப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காணிகளையும் வீடுகளையும் பாதுகாப்பதா அல்லது சாதாரண மக்களை நசுக்கி அவர்களின் காணிகளை வெள்ளைக்காரர்களுக்கு விற்கும் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார். பிட்டகோட்டே ஒபேசேகரபுரவில் புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொழும்பு நகரில் வீடுகளை உடைக்க மாட்டோமென காலை தொடக்கம் இரவுவரை அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசங்களில் என்ன நடக்கின்றது.
இவ் பிரதேசங்களில் 300 வீடுகளை உடைத்து மக்களை வெளியேற்றுவதற்கான அனுமதி கோரி நகர அபிவிருத்தி அதிகார சபை வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அத்தோடு 2500 வீடுகளை உடைப்பதற்காக வழக்கு தாக்கல் செய்வது தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வீடுகளை உடைக்க மாட்டோம் என்கிறது. அப்படியானால் ஏன் நகர அபிவிருத்தி அதிகார சபை வீடுகளை உடைக்க வழக்கு தொடர வேண்டும்.
நகர அபிவிருத்தி அதிகார சபையென்பது தனியானதொரு ராஜ்ஜியமா? அரசாங்கத்தின் அனுமதியின்றி எப்படி வீடுகளை உடைக்க முடியும்.
உழைக்கும் வர்க்கம், நடுத்தர குடும்பங்கள் வாழும், வீடுகள் வறுமையில் வாழும் மக்களின் வீடுகளை உøடத்து அக்காணிகளை வெள்ளைக்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் விற்றுத் தீர்க்க ஐக்கிய முன்னணி அரசு திட்டங்களை தயார்படுத்தியுள்ளது. இந்தத் துர்ப்பாக்கிய நிலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இரண்டு வழிமுறைகளே உள்ளது.
பொது மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதா அல்லது சாதாரண மக்களை நசுக்கி கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, மொறட்டுவை, கொலன்னாவை பிரதேசங்களில் வாழும் அப்பிரதேசங்களை வெள்ளைக்காரர்களின் நகரமாக்குவதா என்பதுவேயாகும்.
மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு ஐ.தே. கட்சியாகும். மக்களை அவர்கள் வாழும் பிரதேசங்களிலேயே நாம் வாழ வைப்போம். இவை தேவையில்லை.யென்றால் எந்தக் கட்சிக்காவது வாக்களிக்கவும்.
கோட்டை நகர சபை ஆட்சியதிகாரத்தை ஐ.தே. கட்சி கைப்பற்றியதும் முதல் வேலை அரசாங்கத்தின் வீடுகளை உடைக்கும் திட்டத்திற்கு எதிராக சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாகும். ஐ.தே. கட்சியிலுள்ள சட்டத்தரணிகளுடன் இணைந்து வீடுகளை உடைப்பதற்கு எதிராக போராடுவோம்.
மாநகர சபையில் உத்தரவைப் பெற்ற பின்னர் வீடுகளை உடைப்பதை எம்மால் தடுக்க முடியும். ஏழைகளின் வீடுகளை ஏன் உடைக்க வேண்டுமென நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன். அம் மக்களுக்கு அவர்களது வீடுகள் எவ்வளவு பெறுமதிமிக்கவை என்பது அரசாங்கத்திற்கு தெரியாது.
கோட்டே நகரத்தை ஐ.தே. கட்சியே அபிவிருத்தி செய்தது. எனவே இது தொடர்பில் பேசுவதற்கு எமக்கு உரிமை உண்டு.
இப்பிரதேசத்தில் பாராளுமன்றத்தை நிர்மாணித்தபோது பெரும் தொகைப் பணத்தை செலவழித்து பாராளுமன்றம் தேவையா என அன்று அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க கேள்வியெழுப்பினார்.
ஆனால் இன்று இதனாலான பலன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இப்பிரதேசம் அபிவிருத்தியடைந்துள்ளது.
இசுறுபாய, செத்சிறிபாய என அரசாங்க கட்டிடங்கள், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை, மஹரகம இளைஞர் சேவைகள்மன்றம் போன்ற பல்வேறு கட்டிடங்கள் ஐ.தே. கட்சி ஆட்சியில் பிரேமதாஸாவால் நிர்மாணிக்கப்பட்டது.
கடந்த ஆறு வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் கோட்டேயில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டனவா?
ஆனால் ஒன்றைச் செய்தார்கள் நகரை அபிவிருத்தி செய்வது அல்ல பணம் சம்பாதித்தனர். செல்வந்தர்களானார்கள்.
இறுதியில் என்ன நடந்தது. 2009இல் பாராளுமன்றமும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனை தடுப்பதற்கு நாம் திட்டத்தை தயாரித்து கொடுத்ததால் இன்று பாராளுமன்றம் வெள்ளத்தினால் மூழ்குவது தடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரை வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்யும் அதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுரவை இணை நகரமாக அபிவிருத்தி செய்வோம். தேர்தலின் பின்னர் இதற்காக மக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வோம்.
அதற்கு முன்பதாக இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம். கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு முன்பு மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் பத்து மாத கடன் வழங்கும் நிதியம் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றுள்ளது.
அந்தளவிற்கு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஐ.தே. கட்சி ஆட்சியதிகாரம் உள்ள நுவரெலியா மாநகர சபையே அதிகளவில் விருதுகளை பெற்றுள்ளது.
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நான் பிரதமராக பதவி வகித்தபோது நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஆனால் இன்று அவ்வாறான நிதியுதவிகள் கிடைப்பதில்லை. அரசாங்கம் வெளிநாடுகளுடனான நட்புறவுகளை முறித்துக் கொண்டுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply