தமிழர்களை பிச்சைப் பாத்திரம் ஏந்த வைத்ததைத் தவிர முப்பது வருட யுத்தத்தில் புலிகள் சாதித்தது என்ன ?
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ப..கி.பட்டாபிராமன் தலைமையிலும் மாநிலச் செயலாளர் மா.சுந்தரராஜன் முன்னிலையிலும் சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. தமிழகத்தின் சகல மாவட்டங்களிலும் இருந்து கட்சியின் முன்னணித் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதி நாளான நேற்று (04.01.2009) சிறப்பு அழைப்பாளராக பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எவ்) பொதுச் செயலாளர் திருநாவக்கரசு சிறிதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மா. சுந்தரராஜன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.இந் நிகழ்வில் கலந்துகொண்டு தோழர் சிறிதரன் உரையாற்றும் போது
“உங்களுடன் மனம் திறந்து பேசுவதற்கு எமக்கு உரிமை உள்ளது. தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் எமக்கு வழிகாட்டியாக இருந்ததை நாம் என்றும் மறக்கமாட்டோம.; அவர் தோழர் பத்மநாபாவுடன் ஆழ்ந்த நட்போடிருந்து எமக்கெல்லாம் வழிகாட்டினார்.
புலிகளின் பிரச்சினை வேறு தமிழர்களின் பிரச்சினை வேறு இன்று தமிழர்களின் தீர்வு தொடர்பான விடயம் தள்ளிப் போவதற்கு இலங்கை அரசைவிட புலிகளின் பங்கே அதிகமாக உள்ளது.
புலிகள் பல ஆளுமை மிக்க தலைவர்கள் விஜயானந்தன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என பலரை கொலை செய்துள்ளார்கள் தமிழர்களுடைய ஜனநாயக உரிமைகளை, மனித உரிமைகளை அவர்கள் மதிப்பதில்லை.
புலிகள் ஒரு பாசிச சக்தி என்ற காரணத்தால் தான் அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மதிப்பதில்லை. இந்தியாவில் பல கட்சிகள் செயல்படுகிறது இலங்கையில் அதாவது புலிகளின் பிடியில் உள்ள பகுதியில் அப்படி இல்லை
இலங்கையில் பிரச்சினை தீர்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது, 1994 சந்திரிகாவால் சமஸ்டிமுறையிலான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டது. இது நீலன் திருச்செல்வம் அவர்களால் எழுதப்பட்டது அவரையும் புலிகள் கொலை செய்தார்கள், ஒஸ்லோவில் உதவி வழங்கும் நாடுகள் பங்குபற்றிய மாநாட்டில் சமஸ்டிமுறை தீர்வு முன்வைக்கப்பட்டது. இப்படி பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டவர்கள் புலிகள்.
தமிழ் சகோதர இயக்கத்தை சார்ந்தவர்களை மட்டுமல்ல 28000 முஸ்லீம் குடும்பங்களை உடுத்த உடையுடன் துரத்தியவர்கள் புலிகள்.
புலிகள் பேரினவாதத்துக்கு என்றும் அனுசரைனையான செயல்களையே செய்து வந்துள்ளனர்.
இன்று வன்னி மக்கள் பாரிய பேரவலத்தை சந்திக்கின்றனர். அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு பீரங்கி செல் வலைக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஒரு குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களை புலிகள் மனித கேடயமாக பயன்படுத்துகின்றனர். இதை யாழ்ப்பாணம் ஆயரும் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் சொல்லியுள்ளது.
யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலிகள் பல கொலைகளைச் செய்துள்ளனர். ஆயுத சேகரிப்பு செய்துள்ளனர். உண்மையான யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் நேபாளத்தில் பிரசண்டா செய்தது போல.
கிளிநொச்சி பிடிபட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றில்லை. இலங்கையில் பிரிவினை சாத்தியமில்லை. முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், மலையமக்களின் பிரச்சினைகளும்; கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பாசிச போக்கு இல்லாதொழிக்கப்பட வேண்டும் அதிகார பகிர்வு, ஜனநாயகம் என்பன உருவாக்கப்பட வேண்டும்.
“நாங்கள் பட்ட துன்பம் போதும் அனைத்து கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
முப்பது வருடங்களாக போராடி புலிகள் என்ன செய்துள்ளார்கள், தமிழர்களை பிச்சைப் பாத்திரம் ஏந்த வைத்துள்ளார்கள்”
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply