புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களில் 755 பேர் மட்டுமே திங்கள் விடுதலை
வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புனர் வாழ்வுப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களில் 755 பேர் மட்டுமே திங்களன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை செயற்பட்டு வந்த புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து இராணுவத்தினரால் திங்கட்கிழமை பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் வைபவ ரீதியாக 1800 பேர் விடுதலை செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருவர் கூட அன்று பெற்றோருடன் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
விடுதலை செய்யப்படுபவர்களுக்கு ஐ.ஓ.எம். நிறுவனத்தினரால் அதிகாரிகளின் ஏற்பாட்டில் வழங்கப்படுகின்ற விஷேட அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அன்றைய தினம் தயார்ப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தினால் ஜனாதிபதியினால் அடையாளமாக விடுவிக்கப்பட்ட 30 பேரும் கூட வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
விடுதலை செய்யப்படுபவர்களுக்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு 1800 பேரும் திங்கட்கிழமையும் நேற்று செவ்வாய்க்கிழமையும் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
எனினும் திங்களன்று 755 பேர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய புனர்வாழ்வு நிலையத்துக்கு காலையிலேயே அழைத்து வரப்பட்டு நண்பகலுக்குப் பின்னர் தொடங்கி மாலை வரையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் ஏற்கனவே அறிவித்தவாறு நேற்று செவ்வாய்க்கிழமை எவரும் விடுதலை செய்யப்படவில்லை. மிகுதியாக விடுதலை செய்யப்படவுள்ளவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே நேற்று எவரும் விடுதலை செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
விடுதலை செய்யப்படுபவர்களுக்கான ஆவணங்கள் எப்போது தயாராகும், அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறித்து விபரங்கள் எதுவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply